திருவாரூர் மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் - 650 பேர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 650 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
அதன்படி திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சேர்ந்த விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட தலைவர் கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, விவசாய சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை அவர்கள் மறிக்க முயன்றனர். ஆனால் யாரும் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு ரெயில் நிலையம் முன்பு போலீசார் தடுப்புகளை அமைத்தனர். இதனால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
இந்தநிலையில் சிலர் திடீரென ரெயில் நிலைய வளாக தடுப்பு சுவர் மீது ஏறி குதித்து ரெயில் நிலையத்திற்குள் சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து மறியலில் ஈடுபட முயன்ற 2 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.
திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர்கள் காரல்மார்க்ஸ், கதிரேசன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் சண்முகவேல், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை மறியல் போராட்டத்தினால் திருத்துறைப்பூண்டி - திருவாரூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதில் மாவட்ட விவசாய சங்க பொருளாளர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கலைமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, தமிழ்மணி, முருகானந்தம், கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட 90 பேரை திருத்துறைப்பூண்டி போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஒன்றிய நகர ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி, எல்.பி.எப்., ஆகியவற்றின் சார்பில் மன்னார்குடி தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் புண்ணீஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் கலைச்செல்வன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர்கள் பழனிவேல், ரகுபதி, ஐ.என்.டி.யூ.சி மாநில துணை பொது செயலாளர் பாண்டியன், எல்.பி.எப். பேரவை செயலாளர் பாண்டியன், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் மகாதேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை மன்னார்குடி போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தையொட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட தலைவர் மாலதி, எல்.பி.எப். தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் தமிழரசன், ஐ.என்.டி.யூ.சி. மண்டல துணைத்தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 110 பேரை திருத்துறைப்பூண்டி போலீசார் கைது செய்தனர்.
அதேபோல மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் தலைமை தபால் நிலையத்தை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் குணசேகரன், எல்.பி.எப். மாவட்ட தலைவர் குருநாதன், ஐ.என்.டி.யூ.சி. மண்டல தலைவர் அம்பிகாபதி, எச்.எம்.எஸ். தலைவர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதனையடுத்து திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன் தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்கள் உள்பட 250 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story