கவர்னரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு: புதுச்சேரிக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும் நாராயணசாமி பேச்சு


கவர்னரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு: புதுச்சேரிக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும் நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 9 Jan 2020 5:23 AM IST (Updated: 9 Jan 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

கவர்னரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். புதுச்சேரிக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பாகூர்,

தவளக்குப்பம் அடுத்துள்ள பூரணாங்குப்பம் கிராமத்தில் கடந்த 1980-ம் ஆண்டு முதல் அரசு கிளை நூலகம் இயங்கி வருகிறது. இங்கு, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 571 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த நூலகத்திற்கு முன்னாள் எம்.பி., கண்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாக சுமார் 25 லட்ச ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

இப்புதிய நூலக கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், உதவி நூலக தகவல் அதிகாரி ஜெஸ்லின் நோரொனா, மணவெளி தொகுதி, கிராம காங்கிரஸ் கமிட்டி கே.எஸ்.ராஜசேகரன், ஆகியோர் வரவேற்று பேசினர். அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கி, நூலக கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது;-

புதுச்சேரியில் மொத்தம் 71 நூலகங்கள் உள்ளன. அதிகாரிகள் இல்லாததால் சில நூலகங்கள் செயல்படாமல் இருந்து வருகின்றன. ஒப்பந்த அடிப்படையில் அதிகாரிகளை நியமித்து நூலகங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி காங்கிரஸ் அரசின் கொள்கையில் ஒன்று தான் இலவச அரிசி திட்டம். இது முறையாக செயல்படுத்தப்பட்டு வந்தது.

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ரங்கசாமி, அரிசி வேண்டாம் பணம் கொடுங்கள் என மத்திய அரசை கேட்டுக்கொண்டதன் பேரில், பணமாக வழங்கப்பட்டது. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, மத்திய குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு, கடிதம் மூலமாக புதுச்சேரி மாநிலத்திற்கு இலவச அரிசி தான் வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

அவர், புதுச்சேரி மக்கள் விரும்பும் ஒற்றை அவியல் அரிசியை ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அனுப்பி வைக்க தயாராக இருப்பதாகவும், அது தொடர்பாக கடிதம் கொடுங்கள் என்றார்.

இதனிடையே, கவர்னர் கிரண்பெடி மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் மூலமாக புதுச்சேரி மக்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் தான் வழங்கிட வேண்டும் என்றார். இலவச அரிசி திட்டத்திற்காக நாம் ஏற்கனவே 180 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தோம். ஆனால், மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான் தற்போது 5 மாத இலவச அரிசிக்கான பணம் வங்கி கணக்கில் போடப்பட்டது.

மத்திய குடிமை பொருள் வழங்கல் அமைச்சர் அரிசியாக கொடுங்கள் என்கிறார். உள்துறை அமைச்சர் அரிசிக்கு பதிலாக பணம் கொடுங்கள் என்கிறார்கள். புதுச்சேரியில் பஞ்சாயத்து தேர்தலை நடத்திட ஆணையரை நியமித்தால், அவரை நீக்க வேண்டும் என கவர்னர் கூறுகிறார்.

மத்திய அரசு மற்றும் கவர்னர் கிரண்பெடி கொடுத்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையிலும், மாதந்தோறும் உரிய காலத்தோடு முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ஓய்வூதியம், கலப்பு திருமண உதவி தொகை, கல்வி உதவி தொகை போன்ற மக்கள்நலத் திட்டங்களை காங்கிரஸ் அரசு செய்து வருகிறது.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் 200 பேருக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசின் வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதம், புதுச்சேரி மாநில அரசின் வளர்ச்சி விகிதம் 11.4 சதவீதம். கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, 7 யூனியன் பிரதேசங்களில் சிறந்த நிர்வாகமாக புதுச்சேரி தேர்வு செய்யப்பட்டு, 4 விருதுகள் கிடைத்துள்ளது.

இந்தியாவில் எந்த ஒரு மாநில நிர்வாகத்திலும், கவர்னரின் தலையீடு கிடையாது. ஆனால், புதுச்சேரி நிர்வாகத்தில் கவர்னர் தலையிட்டு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்.

புதுச்சேரி மாநில மக்களுக்காக, மத்திய அரசையும், கவர்னரையம் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த தொல்லைகள் தற்காலிகமானது தான், புதுச்சேரிக்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பூரணாங்குப்பத்தில் உள்ளாட்சி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பஞ்சாயத்து அலுவலக கட்டிடம், ரேஷன் கடை கட்டிடத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார். விழாவில், கலை பண்பாட்டு துறை, உள்ளாட்சி துறை , பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story