குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ஈரோட்டில் பாரதீய ஜனதா கட்சியினர் பேரணி - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ஈரோட்டில் பாரதீய ஜனதா கட்சியினர் சார்பில் பேரணி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஈரோடு,
குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஈரோட்டில் நேற்று மாலை பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்கு வக்கீல் அணி மாநில அமைப்பாளர் என்.பி.பழனிசாமி தலைமை வகித்தார். ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியன், கோட்ட பொறுப்பாளர் வைரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தேசிய செயலாளர் சுனில் தியோதர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள், குடியுரிமை திருத்த சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல, இஸ்லாமிய சகோதரர்களே வதந்தியை நம்பாதீர்கள், குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது’ என்பது உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தொடங்கிய பேரணி சுவஸ்திக் கார்னர், மேட்டூர் ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, பெருந்துறை ரோடு, கலெக்டர் அலுவலகம் வழியாக சென்று சம்பத்நகரில் முடிவடைந்தது.
இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், வானதி சீனிவாசன், இளைஞர் அணி தேசிய துணைத்தலைவர் எ.பி.முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாவட்ட பொதுச்செயலாளர்கள் குணசேகர், கலைச்செல்வன், செயலாளர்கள் செந்தில், கிருஷ்ணா, பொருளாளர் பாலாஜி.
தெற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், ஈரோடு கோட்ட இணை பொறுப்பாளர் பாய்ண்ட்மணி மற்றும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டம் எந்தவிதத்திலும், ஒரு இந்திய குடிமகனைக்கூட பாதிக்கவில்லை. தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சிறுபான்மை மக்களை தூண்டிவிட்டு செய்கின்ற பொய் பிரசாரம் மற்றும் அரசியலை எல்லாம் மக்களுக்கும் எடுத்து சொல்லும் நோக்கில் நாடு முழுவதும் பா.ஜ.க. பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் 4 இடங்களில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டு, சென்னையில் நேற்றும் (அதாவது நேற்று முன்தினம்), ஈரோட்டில் இன்றும் (அதாவது நேற்று) நடத்தப்பட்டது. திருச்சி மற்றும் மதுரையில் நாளை (அதாவது இன்று) நடைபெற உள்ளது. மேலும் வீடுதோறும் சென்று இந்த சட்ட திருத்தம் குறித்து உண்மை அம்சங்களை சொல்வதற்கும், மக்களை தொடர்புகொள்வதற்குமான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவல்களை பொதுமக்கள் புரிந்துகொள்ளும்போது, 100 சதவீதம் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருப்பார்கள்.
ஒருபுறம் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே மக்களை திசை திருப்புவதற்காகவும், தங்களுடைய அரசியல் வாழ்க்கைக்காகவும், குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். இதைப்பற்றியெல்லாம் ஒவ்வொரு சிறிய கிராமங்களில் இருந்து மிகப்பெரிய நகரங்கள் வரை அத்தனை மக்களையும் தொடர்பு கொள்வதற்காக பா.ஜ.க. இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.
தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் அனைத்தும், நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை ஆதரித்துள்ளன. இந்த பேரணி முழுக்க பா.ஜ.க.வால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். சென்னையில் நடந்த பேரணியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதுபோல் வாய்ப்புள்ள இடங்களில் பா.ஜ.க. நடத்தும் பேரணியில் கூட்டணி கட்சியினர் பங்கேற்பார்கள். சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றுவருவதால் ஆளும் கட்சியினர், அவர்களது இயலாமையை தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் மிகத் தெளிவாக பிரதமர் மோடியை ஆதரிகின்றன. உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் கிராமங்களிலும் பா.ஜ.க. எழுச்சி இப்போது தெரிய ஆரம்பித்துள்ளது. கட்சியின் மாநிலத் தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story