பொதுவேலை நிறுத்தம்: பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின - கடைகள் அடைப்பு


பொதுவேலை நிறுத்தம்: பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின - கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 9 Jan 2020 3:30 AM IST (Updated: 9 Jan 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

பொது வேலை நிறுத்தமான நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பஸ், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. ஆனால் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

திருப்பூர், 

ரெயில்வே, பி.எஸ்.என்.எல். வங்கி உள்ளிட்ட பொதுத்துறைகளை விற்கக்கூடாது. அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச பென்சன் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் நேற்று பொதுவேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு திருப்பூர் மாநகரில் பழைய பஸ் நிலையம், புதுமார்க்கெட் வீதி, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வியாபாரிகள் ஆதரவு தெரிவித்து இதில் பங்கேற்றனர். இதன் காரணமாக இந்த பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதுபோல் அவினாசி ரோடு, பி.என்.ரோடு, லட்சுமிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மாநகர பகுதிகளில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்க முடியாமல் அவதியடைந்தனர். பஸ்கள் வழக்கம் போல் ஓடின.

போராட்டத்தின் காரணமாக மாநகர பகுதிகளில் வாகன போக்குவரத்து குறைவாகவே இருந்தது. இதனால் பழைய பஸ் நிலைய பாலம் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் சங்கம், பணியாளர்கள் சங்கம், பொதுசுகாதாரத்துறை அலுவலர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் என பலர் போராட்டங்களின் பங்கேற்றனர்.

வருவாய்த்துறை அலுவலர்களின் போராட்டம் காரணமாக திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் மற்றும் தெற்கு தாலுகா அலுவலகங்கள் அதிகாரிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. இதுபோல் திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் 369 மின் ஊழியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள் 98 பேர் மொத்தம் 467 பேர் இதில் பங்கேற்றனர்.

பொதுவேலை நிறுத்த போராட்டத்தில் திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். இதன் காரணமாக மாவட்டத்தில் 8 ஆயிரம் லாரிகள் மற்றும் 8 ஆயிரம் சரக்கு வாகனங்கள் நேற்று ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. திருப்பூரில் லாரிகள் கூட்செட்டில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் மற்றும் பல்லடத்தில் இருந்து கறிக்கோழிகள், காடா துணிகள், கொப்பரை உள்ளிட்ட சரக்குகள் வெளிபகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படாமல் இருந்தன. நேற்று மட்டும் ரூ.100 கோடிக்கு சரக்குகள் தேக்கமடைந்தது என லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமசாமி தெரிவித்தார்.

திருப்பூரில் ஆடை விற்பனைக்கு பெயர் பெற்ற காதர்பேட்டையில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் பலர் கடைகள் அடைத்திருந்ததால், அவதியடைந்தனர். ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நேற்று ஒரு நாள் மட்டும் காதர்பேட்டையில் ரூ.50 லட்சத்திற்கு ஆடை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆட்டோ, பஸ்கள் வழக்கமாக ஓடின. கடைகள் தான் பல பகுதிகளில் அடைக்கப்பட்டிருந்தன.

திருப்பூரில் பொதுவேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கின. காலையில் இருந்தே தொழிலாளர்கள் உற்சாகமாக நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றனர். ஆடை தயாரிப்பும் நடந்தது. பனியன் நிறுவனங்கள் நேற்று வழக்கம் போல் இயங்கின. 

Next Story