குடும்ப தகராறில் தாக்கப்பட்ட விவசாயி சாவு, 2-வது மனைவியின் மகன் கைது


குடும்ப தகராறில் தாக்கப்பட்ட விவசாயி சாவு, 2-வது மனைவியின் மகன் கைது
x
தினத்தந்தி 9 Jan 2020 3:30 AM IST (Updated: 9 Jan 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக 2-வது மனைவியின் மகன் கைது செய்யப்பட்டார்.

சத்திரப்பட்டி, 

ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டி அருகே உள்ள போடுவார்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). விவசாயி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராதா என்ற பெண்ணை, ராமசாமி 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

ராதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி சதீ‌‌ஷ் (22) வசந்த் (20) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ராதாவுக்கும், ராமசாமிக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீ‌‌ஷ், வசந்த் ஆகியோர் ராமசாமியை உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த ராமசாமி, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர். தலைமறைவான வசந்தை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story