பாந்திரா - ஒர்லி கடல்வழி பாலத்தில் ஆம்புலன்ஸ் வசதி; ஐகோர்ட்டு யோசனை


பாந்திரா - ஒர்லி கடல்வழி பாலத்தில் ஆம்புலன்ஸ் வசதி; ஐகோர்ட்டு யோசனை
x
தினத்தந்தி 9 Jan 2020 5:33 AM IST (Updated: 9 Jan 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

மும்பை - புனே நெடுஞ்சாலையில் நடைபெறும் விபத்துகளில் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இதை தடுக்க இந்த சாலைகளில் ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்கு உத்தரவிட கோரி மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மும்பை,

மராட்டியத்தில் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பாக மும்பை - புனே நெடுஞ்சாலையில் நடைபெறும் விபத்துகளில் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இதை தடுக்க இந்த சாலைகளில் ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்கு உத்தரவிட கோரி ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.சி.தர்மாதிகாரி, ஆர்.ஐ.சக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது, மும்பை - புனே நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு இடங்களில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்று மாநில சாலை மேம்பாட்டு கழகம் சார்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி எஸ்.சி.தர்மாதிகாரி, “பாந்திரா ஒர்லி கடல்வழி பாலத்தில் கார்கள் வேக வரம்பை மீறி செல்வதை காண முடிகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கலாம். ஆனால் விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது? அத்தகைய நபர்கள் மீது எங்களுக்கு எந்த கருணையும் இல்லை. இவர்கள் விபத்துகளை ஏற்படுத்தி மற்றவர்களை கொல்கிறார்கள். அங்கு ஆம்புலன்ஸ் வசதி கிடைத்தால் நல்லது” என்றார்.

இந்த ஆலோசனையை சாலை மேம்பாட்டு கழகம் பரிசீலிக்க உத்தரவிட்ட நீதிபதி, பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்தார்.

Next Story