திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காத காண்டிராக்டர்களுக்கு அபராதம் - கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவு
குறித்த காலத்துக்குள் திட்டப்பணிகளை முடிக்காத காண்டிராக்டர் களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியம், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சனல்குமார், குழித்துறை நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசியதாவது:-
குமரி மாவட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ.251 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்கு தடையின்றி ஒளிரவிடப்பட வேண்டும். பழுதுகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய வேண்டும். மேலும், மாநிலங்களவை, மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நிதியின்கீழ் நடைபெற்று வரும் சாலைப்பணிகள், பூங்கா மேம்பாட்டு பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடித்து அதற்கான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் தடையின்றி வழங்க வேண்டும். டெங்கு விழிப்புணர்வு மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் ஆகியவற்றை தினசரி ஆய்வு மேற்கொண்டு, டெங்கு இல்லாத மாவட்டமாக திகழ அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். மேலும், பாதாள சாக்கடைத்திட்ட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை மற்றும் வலம்புரிவிளையில் ரூ.113 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலைய பணியினையும், வடிவீஸ்வரத்தில் நடைபெற்றுவரும் கழிவுநீர் நீரேற்றும் நிலைய பணியினையும், கட்டபொம்மன் சந்திப்பில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை பணியினையும், பயோ மைனிங் திட்டத்தையும் துரிதப்படுத்த வேண்டும்.
திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத காண்டிராக்டர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் அடிப்படை வசதிகள், சாலை வசதிகள், தெருவிளக்குகள் அமைத்தல், மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் உள்ளிட்ட அனைத்து திட்டப்பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசினார்.
Related Tags :
Next Story