ஈரோட்டில் பயங்கரம்: தலையில் டி.வி.யை போட்டு மூதாட்டி கொலை - பேரன் கைது


ஈரோட்டில் பயங்கரம்: தலையில் டி.வி.யை போட்டு மூதாட்டி கொலை - பேரன் கைது
x
தினத்தந்தி 10 Jan 2020 5:00 AM IST (Updated: 9 Jan 2020 8:55 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தலையில் டி.வி.யை போட்டு மூதாட்டியை கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, 

ஈரோடு சென்னிமலை ரோடு விவேகானந்தா நகரை சேர்ந்த அப்துல் ரசாக்கின் மனைவி ஜோகராம்மாள் (வயது 79). இவருடைய மகன் சாதிக்பாஷா. இவர் தறிப்பட்டறையில் வேலை செய்து வருகிறார். சாதிக்பாஷாவின் மகன் பீர்முகமது (39) சரக்கு ஆட்டோ டிரைவராக உள்ளார். சாதிக்பாஷாவின் மனைவி இறந்துவிட்டார். இதனால் ஜோகராம்மாள், அவரது மகன் சாதிக்பாஷா, பேரன் பீர்முகமது ஆகியோர் ஒரே வீட்டில் வசித்தனர்.

பீர்முகமதுவுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது அவர் தனது பாட்டியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் பீர்முகமது மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த ஜோகராம்மாளிடம் அவர் தகராறு செய்தார். இதில் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த பீர்முகமது ஆத்திரம் தாங்க முடியாமல், வீட்டில் இருந்த டி.வி.யை தூக்கி பாட்டியின் தலையில் போட்டார்.

இதில் ஜோகராம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதன்பின்னர் கொலை செய்யப்பட்ட ஜோகரம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜோகரம்மாளை கொலை செய்த பீர்முகமதுவை கைது செய்தனர்.

பாட்டியின் தலையில் டி.வி.யை போட்டு பேரன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story