திருச்சியில் கைதிகளால் தயாரிக்கப்பட்ட குளியல், சலவை சோப்புகள் சிறை அங்காடியில் விற்பனை - போலீஸ் டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
திருச்சியில் கைதிகளால் தயாரிக்கப்பட்ட குளியல் மற்றும் சலவை சோப்புகள் விற்பனையை சிறை அங்காடியில், சிறைத்துறை டி.ஐ.ஜி.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.
திருச்சி,
திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள் என 1,400 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனை கைதிகள் பலரை நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்து அவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறை வளாகத்தில் உள்ள திறந்தவெளி தோட்டத்தில் கைதிகள் பலர் விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அத்துடன் அட்டை தொழிற்கூடம் அமைக்கப்பட்டு புக் பைண்டிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மத்திய சிறை நுழைவு வாயில் முன்புள்ள திருச்சி-புதுக்கோட்டை மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறை அங்காடியில் ஓட்டல் அமைக்கப்பட்டு அங்கு சாப்பாடு, டிபன் மற்றும் இனிப்பு, கார பலகாரங்களும் கைதிகளால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் கைதிகள் புனர்வாழ்வு பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் திருச்சி மத்திய சிறை கைதிகள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சோப்பு தயாரிக்கும் பயிற்சி நிபுணர்களால் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது கைதிகளால் ‘பிரீடம்’ என்ற பெயரில் குளியல் சோப்பு மற்றும் சலவை சோப்புகள் தயாரித்து நேற்று அவை சிறை அங்காடியில் விற்பனைக்கு வந்தது.
இந்த சோப்பு விற்பனையை சிறைத்துறை டி.ஐ.ஜி.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய சிறை கண்காணிப்பாளர் சங்கர், சிறை அங்காடி கண்காணிப்பாளர் திருமுருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது டி.ஐ.ஜி.சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசால் புதிதாக வழங்கப்பட்ட எந்திரம் மூலம் சிறைவாசிகள் கரங்களால் குளியல் சோப்பு மற்றும் சலவை சோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளிசரின் சோப்புகள், தேங்காய் எண்ணெய் குளியல் சோப்புகளும் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சோப்புகள் குழந்தைகள் விரும்பும் வகையில் பலவகையான பொம்மைகளை உள்ளடக்கி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களை கவரும் வகையில் வண்ண மலர்கள், இதயம், முட்டை, சதுரம் போன்ற வடிவங்களிலும் சோப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. குளியல் சோப்பு-ரூ.16, ஆயில் சோப்பு-ரூ.40, சலவை சோப்பு-ரூ.10, கண்ணாடி சோப்பு-ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை தீவுத்திடலில் நடக்கும் பொருட்காட்சியிலும் விற்பனைக்கு வைக்கப்படுகிறது.
சிறையில் இருந்து விடுதலையாகி செல்பவர்கள், சொந்த ஊரில் அவர்கள் புதிய தொழில் முனைவோர்களாக சுயமாக தொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கொலை, கொலை முயற்சி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறை நலநிதி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு குறைவான விண்ணப்பங்களே வந்தது. அதன்படி, 24 பேரின் குடும்பத்துக்கு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் நலநிதி வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பலர் விண்ணப்பம் செய்வதே இல்லை. காரணம், போதிய விழிப்புணர்வு இல்லாததுதான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story