திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த என்ஜினீயரிங் மாணவி தற்கொலை - தனியார் விடுதியில் தூக்கில் தொங்கினார்
திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வந்த மாணவி, தனியார் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி,
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மாத்தூர் அருகே திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. அதில், தர்மபுரியை சேர்ந்த ஜெயவேல் என்பவரது மகள் லோகேஸ்வரி (வயது 20) பி.இ. சிவில் என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்காமல், நவல்பட்டு போலீஸ் எல்லைக்குட்பட்ட தனியார் விடுதி ஒன்றில் லோகேஸ்வரி தங்கி படித்து வந்தார். அதே பல்கலைக்கழகத்தில் தர்மபுரியை சேர்ந்த மாணவர் ஒருவரும், லோகேஸ்வரியுடன் படித்து வந்தார். இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் நட்பாக பழகி வந்தவர்கள், நாளடைவில் காதல் வயப்பட்டனர்.
இருவரது காதல் விஷயம் அறிந்த பெற்றோர், இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தமும் செய்து விட்டதாக கூறப்படுகிறது. படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக இருவரது பெற்றோரும் முடிவு செய்திருந்தார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பல்கலைக்கழகத்தில் வகுப்பு முடிந்து, தனியார் விடுதிக்கு மாலை லோகேஸ்வரி திரும்பி இருக்கிறார். இரவு சாப்பாடு முடிந்து சக தோழிகளுடன் பேசிவிட்டு தூங்க சென்றுள்ளார். காலையில் விடுதி அறையில் உள்ள சக மாணவிகள் எழுந்து பார்க்கையில், அங்குள்ள மின்விசிறி கொக்கியில் லோகேஸ்வரி துப்பட்டாவால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். கடந்த சில நாட்களாக லோகேஸ்வரி மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.
தகவல் கிடைத்ததும் நவல்பட்டு போலீசார் விரைந்து சென்று, மாணவி லோகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல் வருமாறு:-
தந்தை ஜெயவேலுக்கு கடன் சுமை இருந்ததால் லோகேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார். எனவே, கல்வி உதவித்தொகை பெற்று படிப்பை தொடர நினைத்த லோகேஸ்வரி, அதற்கான விண்ணப்பமனு அளிக்க உடன் பயிலும் காதலனை பல்கலைக்கழக அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது.
தந்தையின் கடன் பிரச்சினை, காதலன் சரியாக நடந்து கொள்ளாதது என மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான லோகேஸ்வரி தற்கொலை முடிவை தேடிக்கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story