குலசேகரன்பட்டினம் அருகே, படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு


குலசேகரன்பட்டினம் அருகே, படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 10 Jan 2020 4:00 AM IST (Updated: 9 Jan 2020 11:23 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் அருகே படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

ஆறுமுகநேரி, 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழியைச் சேர்ந்தவர் டோமினிக் (வயது 49). மீனவரான இவர் நேற்று முன்தினம் அதிகாலையில் தனது நாட்டுப்படகில் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களான இசக்கிராஜா (39), ராஜ் (51), சூசை (38), இளங்கோ (43), மற்றொரு ராஜ் (50) ஆகியோரை அழைத்துக் கொண்டு கடலில் மீன்பிடிக்க சென்றார்.

அவர்கள் 6 பேரும் சுமார் 21 கடல் மைல் தொலைவில் சென்று மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். காலை 10 மணி அளவில் கடலில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் சிக்கிய நாட்டுப்படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது.

அப்போது படகில் இருந்த பாய்மரம் விரிக்க பயன்படுத்தும் மூங்கில் கம்பு மிதந்தது. எனவே, அதனை பிடித்துக் கொண்டு மீனவர்கள் 6 பேரும் நடுக்கடலில் தத்தளித்தனர். சுமார் 13 மணி நேரத்துக்கு மேலாக கடலில் தத்தளித்த மீனவர்கள் சோர்வடைந்தனர்.

இதற்கிடையே, புன்னக்காயலைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன் பிடித்தனர். அப்போது அவர்களது மண்எண்ணெய் அடுப்பு பழுதடைந்ததால், அதனை சரி செய்வதற்காக படகில் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது இரவு 11 மணி அளவில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்கள் தங்களை காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பினர். உடனே புன்னக்காயல் மீனவர்கள், அங்கு சென்று பார்த்தபோது, ஒரு மூங்கில் கம்பை 2 பேர் பிடித்துக் கொண்டு கடலில் தத்தளித்தனர். உடனே அவர்களை மீனவர்கள் மீட்டனர். மேலும் அங்கு அருகருகே தனித்தனியாக தத்தளித்து கொண்டிருந்த மற்ற 4 மீனவர்களையும் மீட்டனர். இதில் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது.

இதையடுத்து மீட்கப்பட்ட 6 மீனவர்களையும் தங்களது நாட்டுப்படகில் ஏற்றி, கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களுக்கு புன்னக்காயல் தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story