நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவில் தேரோட்டம்
நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நெல்லை,
நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் உள்ள செப்பறை கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை, நடன தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.
கடந்த 7-ந்தேதி காலை 10.30 மணிக்கு அழகிய கூத்தர் விழா மண்டபத்துக்கு எழுந்தருளினார். பின்னர் சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 11 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். 11.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அழகிய பசுமையான வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்துள்ள ரதவீதியில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது.
விழாவின் மற்றொரு சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இன்று அதிகாலை 2 மணிக்கு மகாஅபிஷேகம், 5.30 மணிக்கு கோ பூஜை, ஆருத்ரா தரிசனம், மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனை, மாலை 3 மணிக்கு சுவாமி வீதிஉலா, இரவு 10 மணிக்கு தாமிர சபைக்கு அழகிய கூத்தர் எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.
Related Tags :
Next Story