செந்துறை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு: தலைவர் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க.- பா.ம.க. தீவிரம்
செந்துறை ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில் ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்ற அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் உள்ள 19 ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவிக்கு கடந்த மாதம் 27-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் 19 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் பா.ம.க.வை சேர்ந்த 5 பேரும், அ.தி.மு.க.வை சேர்ந்த 4 பேரும், தி.மு.க.வை சேர்ந்த 4 பேரும்,தே.மு.தி.க.வில் ஒருவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 பேரும், அ.ம.மு.க.வை சேர்ந்த ஒருவரும் மற்றும் 2 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். அவர்களுக்கான பதவியேற்பு விழா ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மூத்த உறுப்பினரான பொன் பரப்பி வார்டு உறுப்பினர் பரஞ்சோதி செல்வம் தலைமை தாங்கினார்.
தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடாசலம், 19 ஒன்றிய உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதேவி, சிவாஜி உள்பட அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பதவி பிரமாணத்தை தொடர்ந்து செந்துறை போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
ஒன்றிய குழு உறுப்பினர்களாக பதவி ஏற்ற 19 உறுப்பினர்களும் நாளை (சனிக்கிழமை) ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர்களை தேர்ந்து எடுக்கிறார்கள். ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்ற பா.ம.க.வும், அ.தி.மு.க.வும் கடும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது.
Related Tags :
Next Story