வேளச்சேரியில் மூடப்பட்ட ஐ.ஐ.டி. நுழைவு வாயிலை திறக்க கோரி பொதுமக்கள் போராட்டம்


வேளச்சேரியில் மூடப்பட்ட ஐ.ஐ.டி. நுழைவு வாயிலை திறக்க கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2020 4:45 AM IST (Updated: 10 Jan 2020 1:21 AM IST)
t-max-icont-min-icon

வேளச்சேரியில் மூடப்பட்ட ஐ.ஐ.டி. நுழைவு வாயிலை திறக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலந்தூர்,

சென்னை ஐ.ஐ.டி. வளாகம் சுமார் 620 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதற்கு சர்தார் பட்டேல் சாலையில் பிரதான நுழைவு வாயில் உள்ளது. இதைத்தவிர வேளச்சேரி, தரமணி, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்களின் வசதிக்காக நுழைவுவாயில்கள் உள்ளன.

இதனால் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், ஐ.ஐ.டி. மாணவர் விடுதிகளில் பணியாற்றும் அரசு மற்றும் தற்காலிக பணியாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அவர்கள் குடியிருக்கும் அந்தந்த பகுதியில் உள்ள நுழைவுவாயில் வழியாக சென்று வருவது வழக்கம்.

அதேபோல் வேளச்சேரி காந்தி சாலையை சுற்றி குடியிருப்பவர்கள், காந்தி சாலையில் உள்ள நுழைவுவாயில் வழியாக சென்று வந்தனர். இந்த பகுதி மக்களின் குல தெய்வமான துர்க்கை பீலியம்மன் கோவிலுக்கும் இந்தவழியாகத்தான் சென்று வருவது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி ஐ.ஐ.டி. நிர்வாகம் எந்த முன் அறிவிப்பும் இன்றி வேளச்சேரியில் உள்ள கிருஷ்ணா கேட் நுழைவு வாயிலை மூடிவிட்டது. இதனால் இப்பகுதி மக்கள், ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வேளச்சேரி மெயின் சாலையை ஒட்டியுள்ள நுழைவுவாயில் அல்லது தரமணி பகுதியில் உள்ள நுழைவுவாயில் வழியாக சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் அப்பகுதியில் இருந்து சென்று படிக்கும் மாணவிகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்த வளாகத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று தரமான கல்வியை பெற முடியாத சூழ்நிலை ஏற்படும் எனவும் கருதுகின்றனர்.

எனவே மூடப்பட்ட வேளச்சேரி கிருஷ்ணா கேட் நுழைவு வாயிலை மீண்டும் திறக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் ஐ.ஐ.டி. நிர்வாகம் நுழைவு வாயிலை திறக்க எந்த நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள், வியாபாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று வேளச்சேரி மெயின் சாலை, காந்தி சாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், மூடப்பட்ட கிருஷ்ணா கேட் நுழைவு வாயிலை உடனடியாக திறந்து வழிவிடவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். “இடம் கொடுத்து வேளச்சேரி மக்கள் படிக்க வழி கொடு” என்பது போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளையும் அவர்கள் கையில் ஏந்தி இருந்தனர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story