சிவகிரி அருகே பயங்கரம்: சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை - மகன் கைது
சிவகிரி அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி,
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் நடுவூர் ராமசாமியாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 63), விவசாயி. இவருக்கு முருகன், பாலசுப்பிரமணியன் என்ற சுப்புராஜூ ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வேலுச்சாமிக்கு சொந்தமாக அந்த பகுதியில் சுமார் 30 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில், 2 மகன்களுக்கும் தலா 10 ஏக்கர் நிலத்தை பிரித்துக் கொடுத்து விட்டு, மீதி 10 ஏக்கர் நிலத்தை வேலுச்சாமி தன்வசம் வைத்திருந்தார்.
இந்த நிலையில் வேலுச்சாமி தனது நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலையில், மூத்த மகன் முருகனிடம் ரூ.2 லட்சம் தந்து விட்டு தனது நிலத்தை வைத்துக்கொள்ளும்படி கூறி உள்ளார். அதற்கு அவர், தன்னிடம் பணம் இல்லாததால் நிலம் தனக்கு வேண்டாம் என்று தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து பாலசுப்பிரமணியன் தனது தந்தையிடம் ரூ.2 லட்சத்தை கொடுத்து அந்த நிலத்தை வாங்கி விவசாயம் செய்து வந்தார்.
தற்போது மழை பெய்து செழித்து உள்ளதால், முருகன் தனது தந்தையிடம் சென்று, நெல் நாற்று நடுவதற்கு 2 ஏக்கர் நிலம் தரும்படி கேட்டு உள்ளார். உடனே அவர், பாலசுப்பிரமணியனிடம் அண்ணனுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கும்படி கூறி இருக்கிறார். ஆனால் அவர் நிலம் கொடுக்க மறுத்து இருக்கிறார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முருகனுக்கும், பாலசுப்பிரமணியனுக்கும் வயலில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த வேலுச்சாமி வயலுக்கு புறப்பட்டு சென்றார். அவரை முருகன் வழியில் சந்தித்தார். அப்போது, தனது தந்தை ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதால் தான் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று நினைத்துக்கொண்டு, முருகன் கம்பால் வேலுச்சாமியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த வேலுச்சாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராஜபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாசுதேவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வேலுச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். பின்னர் அவர் சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சொத்து தகராறில் விவசாயியை அவருடைய மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story