பொங்கல் பண்டிகை: தாராசுரம் காய்கறி சந்தைக்கு கரும்பு வரத்து அதிகரிப்பு, மஞ்சள்-இஞ்சி கொத்துகளை வாங்க மக்கள் ஆர்வம்


பொங்கல் பண்டிகை: தாராசுரம் காய்கறி சந்தைக்கு கரும்பு வரத்து அதிகரிப்பு, மஞ்சள்-இஞ்சி கொத்துகளை வாங்க மக்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 10 Jan 2020 3:45 AM IST (Updated: 10 Jan 2020 3:16 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாராசுரம் காய்கறி சந்தைக்கு கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கும்பகோணம்,

பொங்கல் பண்டிகை அன்று மக்கள் சூரியனுக்கு கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்துகளை படைத்து வழிபாடு செய்வார்கள். புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர்வரிசையாக வழங்கப்படும் பொருட்களில் கரும்பு, மஞ்சள், இஞ்சிக்கு முக்கிய இடம் உண்டு.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கரும்பு, மஞ்சள், இஞ்சி மற்றும் வாழைத்தாருக்கான தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.

மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு கரும்பு வரத்து அதிகரித்துள்ளது. இங்கு ஒரு கட்டு கரும்பு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகள் தலா ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கும்பகோணம் பகுதியில் கரும்பு விளைச்சல் அதிகமாக இல்லாததால் அரியலூர், பண்ருட்டி அருகே உள்ள சத்திரம் சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன.

அதேநேரத்தில் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மஞ்சளும், இஞ்சியும் விற்பனைக்காக தாராசுரம் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. கரும்பு, மஞ்சள், இஞ்சி வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவற்றின் விற்பனை தாராசுரம் சந்தையில் விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது.

Next Story