மருந்து சீட்டுகளை முறையாக பராமரிக்காத கடை உரிமையாளருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு


மருந்து சீட்டுகளை முறையாக பராமரிக்காத கடை உரிமையாளருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
x

கடந்த 2018-ம் ஆண்டு பள்ளிப்பட்டு மெயின் ரோடு பகுதியில் உள்ள மருந்து கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சரக மருந்துகள் ஆய்வாளர் கேத்தரிநாதன் மற்றும் மருந்து ஆய்வாளர்கள் கடந்த 2018-ம் ஆண்டு பள்ளிப்பட்டு மெயின் ரோடு பகுதியில் உள்ள மருந்து கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகள் ஒரு கடையில் ஆய்வு செய்தபோது அந்த கடையில் உரிமையாளரான நாகேஷ்பாபு மற்றும் பதிவு பெற்ற மருந்தாளுனரான சேகர் ஆகியோர் இருந்தனர். மேலும் மருந்து ஆய்வாளர்கள் ஆய்வின்போது அந்த மருந்து கடையில் மருந்து சீட்டு பதிவேட்டில் மருந்தாளுனரின் கையொப்பத்துடன் மருந்துகளின் விவரங்கள் எழுதப்பட்டு முறையாக பராமரிக்க படவில்லை என்பதும், மருந்துகளின் கொள்முதல் மற்றும் கையிருப்பு போன்றவை முறையாக வைக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும் குறிப்பிட்ட 11 வகையான மருந்துகளுக்கு முறையான விற்பனை ரசீது இல்லாமல் இருந்ததும் ஆய்வின்போது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மருந்து கடையின் உரிமையாளரான நாகேஷ்பாபு மீது அழகுசாதன சட்டப் பிரிவின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதித்துறை நடுவர் ஸ்ரீஜா நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மருந்து கடை உரிமையாளரான நாகேஷ் பாபுவுக்கு ரூ.80 ஆயிரம் அபராதமும், அதை செலுத்த தவறினால் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அவரிடம் இருந்து அபராதத்தொகை ரூ.80 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும் நாகேஷ் பாபுவை ஒரு ஆண்டு நன்னடத்தை அலுவலரின் மேற்பார்வையில் வைத்திருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

Next Story