குழந்தைகள் மீட்பு, தத்தெடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
குழந்தைகள் மீட்பு, தத்தெடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று சமூக பாதுகாப்பு துறையுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து குழந்தைகள் தத்தெடுப்பு விதிமுறைகள்–2017 மற்றும் சட்ட விரோத தத்தெடுப்பு தடுத்தல் குறித்த கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி வைத்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–
தொட்டில், குப்பை, சாலையோரங்கள், கிரிவலப்பாதையில் குழந்தைகளை போட்டு விட்டு செல்கிறார்கள். இதுகுறித்து யாருக்கு முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும். எப்படி மீட்க வேண்டும் என்பது உள்பட அனைத்து தகவல் குறித்தும் இங்கு எடுத்துரைக்கப்பட்டது. குழந்தைகள் தேவை யாருக்கு இருக்கிறது என்று கண்டறிந்து தத்தெடுப்பதன் வழிமுறைகள் குறித்து அவர்களிடம் விளக்க வேண்டும். தற்போது குழந்தைகள் மையத்தில் இருந்து துணை தத்தெடுப்பு முறையில் 12 வருடம் குழந்தைகளை வளர்க்கும் முறை நடைமுறையில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இம்முறையில் 12 குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
தற்பேது சட்ட ரீதியான குழந்தைகள் தத்தெடுப்பு தேசிய அளவிலான சீனியாரிட்டி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மையங்களில் ஆதரவற்று மீட்கப்பட்ட குழந்தைகள் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் டெரி டெஸ் ஹோம்ஸ் கோர் நிறுவனத்திடம் குழந்தைகள் அளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீட்பு, தத்தெடுப்பு ஆகியவை குறித்து நீங்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத் தொடர்ந்து குழந்தை தத்தெடுப்பு விதிமுறைகள்–2017 என்ற தலைப்பில் எம்.டி.எம். சிறப்பு தத்தெடுப்பு மையம் மற்றும் சமூக பாதுகாப்பு துறை உறுப்பினர் செழியன், சட்ட விரோத தத்தெடுப்பும், தண்டனைகளும் என்ற தலைப்பில் சென்னை சாரா திட்ட மேலாளர் கிருஸ்துதாஸ், குழந்தைகள் பாதுகாப்பில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற குழந்தை பாதுகாப்பு அலுவலர் வித்யாசாகர், சட்ட விரோத தத்தெடுப்பை தடுப்பதில் செவிலியர்களின் பங்கு என்ற தலைப்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை துணை இயக்குனர் மீரா, வருவாய் கோட்ட அலுவலர் ஸ்ரீதேவி, சமூக பாதுகாப்புத்துறை நன்னடத்தை அலுவலர் மகேந்திரன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக கலெக்டர் கந்தசாமி கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கையேட்டினை வழங்கினார்.
Related Tags :
Next Story