வீட்டு வசதி திட்டத்தின் கீழ் முறைகேடாக வீடுகளை பெற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை; அதிகாரிகளுக்கு, ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. உத்தரவு
வீட்டு வசதி திட்டத்தின் கீழ் முறைகேடாக வீடுகளை பெற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. உத்தரவிட்டுள்ளார்.
மைசூரு,
மைசூரு மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் வீட்டு வசதி திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் மந்திரி ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் புஷ்பலதா ஜெகன்நாத், மாநகராட்சி கமிஷனர் குருதத் ஹெக்டே, அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் எத்தனை பயனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளன, அவற்றுக்கான செலவு உள்பட பல்வேறு விவரங்களை அதிகாரிகளிடம், ஜி.டி.தேவேகவுடா கேட்டறிந்தார். ஆவணங்களையும் சரிபார்த்தார்.
இதுவரையில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படாமல் இருக்கும் பயனாளிகளுக்கு உடனடியாக வீடுகளை கட்டிக்கொடுக்க ஜி.டி.தேவேகவுடா உத்தரவிட்டார். மேலும் இத்திட்டத்தின் கீழ் முறைகேடாக வீடுகளை பெற்று, அவற்றை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் நபர்களை கண்டறியும்படியும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு ஜி.டி.தேவேகவுடா உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் அத்தகைய நபர்களிடம் இருந்து வீடுகளை பறிமுதல் செய்து, அவற்றை வீடுகள் இல்லாத பயனாளிகளுக்கு வழங்கவும் ஜி.டி.தேவேகவுடா உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story