பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காததால் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
சேலத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காததால் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 9 லட்சத்து 72 ஆயிரத்து 118 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,557 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. அதாவது, ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு துண்டு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் அனைத்து ரேஷன்கடைகளிலும் காலை முதல் மாலை வரையிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பல இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், சேலம் மாமாங்கம் அருகே பெரிய மோட்டூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று காலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது ரேஷன் கடை ஊழியர் ஒருவர் காலை 9.30 மணிக்கு வந்து சிலருக்கு மட்டும் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் குடும்ப அட்டைதாரர்களின் பதிவுகளை சரி செய்யும் எந்திரம் பழுதடைந்து விட்டதால் பொங்கல் பரிசு தொகுப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அங்கு நின்று கொண்டிருந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர். ஆனால் மதியம் வரையிலும் பழுதடைந்த எந்திரம் சரி செய்யப்படாமல் இருந்ததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் ரேஷன் கடை ஊழியரிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அப்போது, பரிசு பொருட்கள் வாங்க வந்திருந்தவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து அங்கிருந்த ஒருவர், கூட்டமாக இருந்த பெண்களை பார்த்து தரக்குறைவாக பேசியதோடு, பொருட்கள் வழங்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள், அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை பொதுமக்கள் அடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்த சிலர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் அங்கு சென்று கூட்டத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பழுதடைந்த எந்திரம் சரி செய்யப்பட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடந்தது.
Related Tags :
Next Story