நாளை வழங்கப்படுகிறது : கல்லூரி மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி; துணை முதல்-மந்திரி பேட்டி


நாளை வழங்கப்படுகிறது : கல்லூரி மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி; துணை முதல்-மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 11 Jan 2020 5:15 AM IST (Updated: 11 Jan 2020 1:09 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு இலவச மடிக்கணினி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படுவதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

பெங்களூரு, 

துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுவாமி விவேகானந்தர் இளைஞர் அதிகாரமளிப்பு மையங்கள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களிடையே தேசபக்தி உணர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரில் இளைஞர் ஊக்குவிப்பு மையங்கள் அமைக்கப்படும். இந்த ஊக்குவிப்பு மையங்கள் வருகிற 12-ந் தேதி (அதாவது நாளை) தொடங்கப்படும்.

அதே நாளில் கர்நாடகத்தில் இளங்கலை கல்லூரிகளில் படிக்கும் 1 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ரூ.300 கோடி செலவில் இலவசமாக மடிக்கணினி வழங்கப்படுகிறது. இளைஞர்களை முன்னேற்ற செய்தல் மற்றும் சுய முயற்சி மூலம் குறிக்கோளை அடைதலின் சின்னமாக சுவாமி விவேகானந்தர் திகழ்கிறார். 12-ந் தேதி(நாளை) நாங்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறோம். இதற்கான விழா பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. இதில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்.

சுவாமி விவேகானந்தர் இளைஞர் அதிகாரமளிப்பு மையங்கள் மூலம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். மத்திய அரசு இயற்றும் சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. அதை தான் நாங்கள் செய்கிறோம்.

பள்ளி-கல்லூரிகளில் படிக்கும்போதே மாணவர்கள் தங்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையான துறைகளில் 106 சதவீத வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 5.50 லட்சம் பேர் வேைல தேடுகிறார்கள் என்றால், 5.75 லட்சம் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அமைதி வழியில் போராடினால் அதற்கு ஆட்சேபனை இல்லை. ஆரோக்கியமான வழியில் விவாதங்கள் நடைபெறட்டும். ஆனால் சிலர் பயங்கரவாதிகளை போல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இது சரியான வழி அல்ல.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Next Story