பயங்கரவாதிகள் குறித்து 6 பேரிடம் விசாரணை; ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் பேட்டி


பயங்கரவாதிகள் குறித்து 6 பேரிடம் விசாரணை; ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் பேட்டி
x
தினத்தந்தி 10 Jan 2020 11:05 PM GMT (Updated: 10 Jan 2020 11:05 PM GMT)

குமரி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தக்கலை, 

குமரி மாவட்டம் களியக்காவிளையில் தமிழக-கேரள எல்லையில் சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் 8-ந்தேதி இரவு களியக்காவிளை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான வில்சன் (வயது 57) பணியில் இருந்தார்.

அன்று இரவு சோதனைச்சாவடிக்கு வந்த பயங்கரவாதிகள் தவுபிக், அப்துல் சமீம் ஆகிய 2 பேர், வில்சனை சரமாரியாக சுட்டதோடு வெட்டு கத்தியாலும் வெட்டினர். இதில் வில்சன் இறந்தார்.

இந்தநிலையில் பயங்கரவாதிகள் 2 பேரின் நண்பர்கள் மற்றும் அவர்களிடம் அடிக்கடி தொடர்பில் உள்ளவர்கள் என 6 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களை தக்கலை போலீஸ் நிலையத்தில் வைத்து நேற்று நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் அங்கு வந்து, அந்த 6 பேரிடமும், பயங்கரவாதிகள் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டார்.

அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறும்போது, “சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை மிக தீவிரமாக நடந்து வருகிறது. இதில் குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்” என்றார்.

அப்போது நிருபர்கள் குறுக்கிட்டு,‘பாலக்காடு, திருவனந்தபுரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறதே, அது உண்மையா?’ என்று கேட்டனர். அதற்கு, “வழக்கு விசாரணை துரிதமாக நடந்து வருகிறது. விசாரணை முடிவில் முழுவிவரமும் அளிக்கப்படும்” என்றார்.

Next Story