கும்பாபிஷேகத்தையொட்டி, தஞ்சை பெரியகோவில் கோபுர கலசங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை பெரியகோவில் கோபுர கலசங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்,
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரியகோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் கடந்த 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 23 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான திருப்பணி தொல்லியல் துறை மற்றும் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 2-ந்தேதி பாலாலயம் நடைபெற்றது. கும்பாபிஷேக யாகசாலை பூஜைக்காக கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் கொட்டகை அமைக்கப்பட்டு யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. யாகசாலை பூஜைகள் வருகிற 1-ந்தேதி மாலை தொடங்குகிறது. 8 கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரியகோவில் வளாகத்தில் உள்ள ராஜராஜசோழன்கோபுரம் மற்றும் அதனுடன் உள்ள திருச்சுற்று மண்டபத்தை சுற்றிலும் தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழாமல் இருக்கவும், கும்பாபிஷேகத்தை எளிதில் காணும் வகையிலும் இந்த தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோவிலின் 3 புறங்களிலும் இந்த தடுப்புக்கட்டைகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கும்பாபிஷேகத்தையொட்டி அனைத்து சன்னதியிலும் உள்ள கோபுரகலசங்கள் இறக்கப்பட்டு தெற்கு திருச்சுற்று மண்டபத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இந்த கலசங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தற்போது இறக்கி வைக்கப்பட்டுள்ள கலசங்கள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story