11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - நாகையில் நடந்தது


11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - நாகையில் நடந்தது
x
தினத்தந்தி 11 Jan 2020 3:30 AM IST (Updated: 11 Jan 2020 4:54 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ் மாநில வருவாய் அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமுதவிஜயரெங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், 2004-ம் ஆண்டுக்கான முதல் திருத்தப்பட்ட துணை தாசில்தார் பட்டியலை வெளியிட வேண்டும். வருவாய் நிர்வாக ஆணையரின் சுற்றறிக்கையின்படி, ‘அ’பிரிவு பணியாளர்கள் மற்றும் அலுவலக மேலாளர் (பொது) ஆகியோரை மாறுதல் செய்ய வேண்டும். கொடிநாள் வசூல் போன்றவற்றை கட்டாயப்படுத்தக் கூடாது. அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரையிலான அலுவலக பணியாளர் பட்டியலை வெளியிட வேண்டும். துணை தாசில்தார், தாசில்தார் நிலையில் முதுநிலைப்படி சுழற்சி முறையில் வழங்க வேண்டும்.

பொதுமக்கள் நலன் கருதி மாற்றுப்பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும். இரவு காவலர், அலுவலக உதவியாளர், பதிவுறு எழுத்தர் நிலையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சி.பி.சி.எல். நில எடுப்பு அலுவலகங்களை உடனே தொடங்க வேண்டும். வருவாய் தாசில்தார், பணியிடம் வழங்குவதில், ஓராண்டுக்கு மேல் பணி புரிந்தவர்களை நீக்கி முதுநிலை அடிப்படையில் பணிகள் வழங்கவேண்டும். நாடாளுமன்ற தேர்தல் மதிப்பூதியம் வழங்கியதில் உள்ள குறைபாடுகளை களையவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மகளிர் அணி பொருளாளர் நீலாயதாட்சி நன்றி கூறினார்.

Next Story