கன்னிவாடி பகுதியில், யானைகளை விரட்ட பட்டாசு வெடித்தபோது 2 வன ஊழியர்கள் காயம்


கன்னிவாடி பகுதியில், யானைகளை விரட்ட பட்டாசு வெடித்தபோது 2 வன ஊழியர்கள் காயம்
x
தினத்தந்தி 11 Jan 2020 3:45 AM IST (Updated: 11 Jan 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

கன்னிவாடி வனப்பகுதியில் யானைகளை விரட்ட பட்டாசு வெடித்தபோது 2 வன ஊழியர்கள் காயம் அடைந்தனர்.

கன்னிவாடி,

கன்னிவாடி வனப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு உள்ளன. அவை வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகே உள்ள விவசாயிகளின் விளைநிலங்களுக்குள் அவ்வப்போது புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. பெரும்பாலும் இரவு நேரத்தில் வரும் யானைகள் கூட்டமாக நிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை, சோளம் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பல லட்சம் ரூபாய் வரை ந‌‌ஷ்டம் ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்த காட்டுயானைகள் குறிப்பாக கன்னிவாடி நாயோடை அணை, கே.எஸ்.பட்டி, டி.பண்ணைப்பட்டி, கோம்பை, ஆண்டரசன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்களுக்குள் புகுந்து சாகுபடி பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கடந்த 4 நாட்களுக்கு முன், கோம்பையை சேர்ந்த விவசாயி முருகன் யானை தாக்கியதில் பலியானார். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் வித்யா தலைமையில் வனத்துறையினர், சிறப்பு படை பிரிவினருடன் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 63 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் யானைகளை விரட்ட அவ்வப்போது பட்டாசு வெடித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இந்த பணியில் ஈடுபட்டிருந்த கோவை சிறப்பு படை பிரிவை சேர்ந்த வீரர் சூர்யபிரகா‌‌ஷ் (வயது 30) என்பவர் பட்டாசு வெடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய கண்களில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதையடுத்து நேற்று காலையில் யானைகளை விரட்ட பட்டாசு வெடித்தபோது கன்னிவாடியை சேர்ந்த வனக்காப்பாளர் பீட்டர்ராஜா (42) என்பவருக்கு கை விரல்களில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வனத்துறையினர் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கன்னிவாடி வனச்சரகர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, கன்னிவாடி வனப்பகுதியில் யானைகளை தொடர்ந்து விரட்டும் பணியில் இரவு, பகல் என சுழற்சி முறையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடித்தபோது காயமடைந்த ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சோளம், தென்னை, வாழையை தவிர்த்து மாற்றுப்பயிர்களை சாகுபடி செய்தால், யானைகள் வருவது குறையும். முழுமையாக யானைகள் வராத சூழலில், எந்த பயிர் வேண்டுமானாலும் சாகுபடி செய்யலாம். அவ்வாறு செய்தால் யானைகள் தொந்தரவு இருக்காது என்றார்.

Next Story