மறைமுக தேர்தலுக்கு முன்பு அணி மாறிய கவுன்சிலர்கள்


மறைமுக தேர்தலுக்கு முன்பு அணி மாறிய கவுன்சிலர்கள்
x
தினத்தந்தி 10 Jan 2020 10:00 PM GMT (Updated: 11 Jan 2020 12:00 AM GMT)

மறைமுக தேர்தலுக்கு முன்பு கவுன்சிலர்கள் அணி மாறுவதால் கட்சி தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விருதுநகர்,

தமிழகம் முழுவதும் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் யூனியன் தலைவர் துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த மட்டில் மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தமுள்ள 20 இடங்களில் 13 இடங்களில் அ.தி.மு.க. கவுன்சிலர்களும் மீதமுள்ள 7 இடங்களில் தி.மு.க.வினரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவி இடங்கள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும் நிலை உள்ளது.

ஆனாலும் மறைமுக தேர்தல் முறை கடைபிடிக்கப்படுவதால் அ.தி.மு.க. தலைமை வாக்கு எண்ணிக்கை முடிந்த உடனேயே தங்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற அனைத்து கவுன்சிலர்களையும் வெளியூருக்கு அழைத்துச்சென்று தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர். பதவி ஏற்புக்கு மட்டும் அழைத்து வந்த நிலையில் தற்போது இன்று மறைமுக தேர்தலுக்காக அவர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 யூனியன்களில் 7 யூனியன்களில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் விருதுநகர் மற்றும் வெம்பக்கோட்டையில் அ.தி.மு.க. அதிக இடங்களை பெற்றது. நரிக்குடி மற்றும் வத்திராயிருப்பு யூனியன்களில் இழுபறி நிலை இருந்தது. இந்த நிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. மாவட்ட தலைமை நரிக்குடி மற்றும் வத்திராயிருப்பு யூனியன்களில் சுயேச்சை கவுன்சிலர்களின் ஆதரவை பெற முயற்சி மேற்கொண்டனர்.

இதில் வத்திராயிருப்பு யூனியனில் தமிழக மக்கள் முன்னேற்ற கவுன்சிலர் ரேகா அ.தி.மு.க. மாவட்ட செயலாளரான அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்ததால் 13 இடங்களை கொண்ட அந்த யூனியனில் அ.தி.மு.க.வுக்கு 7 இடங்கள் கிடைத்தன. இதனால் அங்கு தலைவர், துணை தலைவர் பதவி அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும் நிலை உள்ளது.

நரிக்குடி யூனியனை பொறுத்த மட்டில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சியினருமே முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டாலும் அந்த யூனியன் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. நரிக்குடி யூனியனில் மொத்தமுள்ள 14 இடங்களில் 5 இடங்களில் அ.தி.மு.க.வும், 6 இடங்களில் தி.மு.க.வும் அ.ம.மு.க. ஒரு இடத்திலும் 2 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ள நிலையில் 2 சுயேச்சைகளின் ஆதரவும் அ.தி. மு.க.வுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப் படுகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. அதிக இடங்களை பெற்றுள்ள விருதுநகர் யூனியனில் அந்த கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுக்க தி.மு.க.வினரும் அந்த கட்சி கவுன்சிலர்களை தங்களுக்கு ஆதரவாக திருப்ப அ.தி.மு.க.வும் வரிந்து கட்டி முயற்சிகள் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக 21-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற தமிழ்ச்செல்வன் 2 நாட்களுக்கு முன்பு தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த யூனியனில் 25-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்ற பேச்சியம்மாள் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து வந்த நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். இவர் தி.மு.க.வுக்கு ஆதரவு தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று தனது கணவருடன் சென்று அதிரடியாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்து தமது ஆதரவை உறுதி செய்தார்.

இதன்மூலம் அ.தி.மு.க. விருதுநகர் யூனியனில் 14 இடங்களை தக்கவைத்துள்ளது.

இன்று மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓட்டுப்பதிவு முடியும் வரை கவுன்சிலர்கள் முறையாக தாங்கள் சார்ந்துள்ள அணிக்கு ஓட்டளிப்பார்களா என்ற சந்தேகம் கட்சி தலைமைக்கு இருப்பதால் அவர்கள் கடும் நெருக்கடியில் இருக்கின்றனர். தங்கள் கவுன்சிலர்களை தங்களது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், கடந்த காலங்களில் ஓட்டு போடும்போது அதிர்ச்சி தரும் மாற்றங்கள் நடந்து இருப்பதால் அம்மாதிரியான நிகழ்வுகள் ஏதும் ஏற்படாத வண்ணம் தடுப்பதில் மிகுந்த கண்காணிப்புடன் உள்ளனர்.

எது எப்படி ஆயினும் ஓட்டுப் பதிவு முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டால்தான் யார் வசம் யூனியன் என்பது உறுதியாக தெரியவரும்.

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் கட்சி தாவலுக்கு தடை சட்டம் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது மறைமுக தேர்தல் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் கட்சிகள் சார்பில் வெற்றி பெற்றுள்ள கவுன்சிலர்கள் ஆதாயம் கருதி அணி மாறுவதை தடுக்க சட்டங்கள் இயற்றப்பட வேண்டியது அத்தியாவசிய தேவை ஆகிறது.

Next Story