அதிகாரி வெளியேறியதால் தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நிறுத்தம் - தி.மு.க.வினர் சாலைமறியல்; கல்வீச்சு
தேர்தல் அதிகாரி திடீரென வெளியேறியதால் தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தண்டராம்பட்டு,
தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மொத்தம் 28 ஒன்றியக்குழு வார்டு உள்ளன. இதற்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27–ந் தேதி நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் 14 உறுப்பினர்களும், அ.தி.மு.க. சார்பில் 10 உறுப்பினர்களும், சுயேச்சையாக 4 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து நேற்று ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 28 உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். செய்தியாளர்கள் உள்பட யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. காலை 11 மணி அளவில் அனைத்து உறுப்பினர்களும் தேர்தல் நடைபெறும் அரங்கத்திற்கு வந்தனர்.
தேர்தல் அதிகாரி செல்வன் மற்றும் அவருக்கு உதவியாக தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் வந்திருந்தார். பின்னர் தேர்தல் குறித்து அதிகாரி செல்வன் விளக்கினார்.
இதனையடுத்து தி.மு.க. சார்பில் 27–வது வார்டு உறுப்பினர் பரிமளா கலைச்செல்வன் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தார். இதேபோல் அ.தி.மு.க. சார்பில் 16–வது வார்டு உறுப்பினர் வினோதினி மனுதாக்கல் செய்தார். சிறிது நேரத்தில் கலெக்டர் தேர்தலை நிறுத்த சொன்னதாகவும், நேரில் வரும்படி உத்தரவிட்டு உள்ளதாகவும் தெரிவித்து தேர்தல் அதிகாரி செல்வன் அங்கிருந்து ஒரு காரில் சேலம் செல்லும் சாலையில் சென்றுவிட்டார்.
அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் 10 பேரும், அவருடன் ஒரு சுயேச்சை உறுப்பினரும் சேர்ந்து 11 பேர் வெளியேறினர். சுமார் ½ மணி நேரம் அரங்கில் காத்திருந்த தி.மு.க. மற்றும் ஆதரவு உறுப்பினர்கள் மொத்தம் 17 பேரும் அறையில் இருந்த வட்டார வளர்ச்சி அதிகாரி முருகனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக வெளியில் காத்திருந்த தி.மு.க. தொண்டர்களுக்கு தகவல் தெரிந்தவுடன் அவர்கள் அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் கல்வீச்சு சம்பவங்களும் நடந்தது. பின்னர் மதியம் 12.30 மணி அளவில் போலீசார் தி.மு.க. மற்றும் ஆதரவு உறுப்பினர்கள் 17 பேரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து 17 உறுப்பினர்களும் கலெக்டர் கந்தசாமியை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
இதனையடுத்து தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் யாரும் விளக்கம் அளிக்கவில்லை.
Related Tags :
Next Story