வேலூரில் ஊராட்சி ஒன்றிய மறு சீரமைப்பு கருத்து கேட்பு கூட்டம் - 3 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு


வேலூரில் ஊராட்சி ஒன்றிய மறு சீரமைப்பு கருத்து கேட்பு கூட்டம் - 3 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 11 Jan 2020 10:45 PM GMT (Updated: 11 Jan 2020 4:44 PM GMT)

வேலூரில் ஊராட்சி ஒன்றிய மறு சீரமைப்பு குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் 3 மாவட்ட கலெக்டர்கள் கலந்துகொண்டனர்.

வேலூர்,

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலையொட்டி ஊராட்சி ஒன்றிய மறு சீரமைப்பு குறித்த கருத்து கேட்பு கூட்டம் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), சிவன்அருள் (திருப்பத்தூர்), திவ்யதர்ஷினி (ராணிப்பேட்டை) ஆகியோர் தலைமை தாங்கினர்.

உத்தேசிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆட்சி எல்லை குறித்து வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் கூறினார்.

இதையடுத்து வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் கூறுகையில், ஊராட்சி ஒன்றிய ஆட்சி எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளது. சில ஊராட்சிகள் ஏற்கனவே இருந்த ஒன்றியங்களில் இருந்து பிரித்து வேறு ஒன்றியங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். அதுகுறித்து ஆய்வு செய்யப்படும். ஆட்சேபனை கருத்துகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந் தேதி கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும். ஒருவேளை தேவைப்பட்டால் மீண்டும் 3-வது கூட்டம் போடலாம் என்றார்.

இதையடுத்து வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த 3 மாவட்ட மக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

வெங்கடேசன்:- பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள 26 ஊராட்சிகளை மாதனூர் ஒன்றியத்தில் சேர்ப்பதை கண்டிக்கிறேன்.

சி.கிருஷ்ணன்:- சந்திராபுரம் ஊராட்சியில் உள்ள பாராண்டபள்ளி, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதியில் அதிக மக்கள் உள்ளனர். எனவே இப்பகுதிகளை பிரித்து தனி ஊராட்சியாக மாற்ற வேண்டும்.

நாகராஜன்:- ரெட்டிவலசையை தனி ஊராட்சியாக மாற்ற வேண்டும்.

அன்பரசன்:- மாதனூர் ஒன்றியத்தில் உள்ள அகரம் ஊராட்சியில் அதிக மக்கள் உள்ளதால் எங்கள் ஊராட்சியை 3-ஆக பிரிக்க வேண்டும்.

அசோகன்:- மாதனூர் ஒன்றியம் சோமலாபுரம் ஊராட்சியை குடியாத்தம் தொகுதியில் ேசர்த்துள்ளனர். எனவே எங்கள் ஊராட்சியை ஆம்பூர் தொகுதியில் சேர்க்க வேண்டும்.

ஜார்ஜ்:- சோமலாபுரம் ஊராட்சியை மாதனூர் ஒன்றியத்தில் சேர்க்க வேண்டும்.

குமார்:- கொல்லகுப்பம், கொல்லகுப்பம் காலனி, கொல்லகுப்பம் புதூர் ஆகிய பகுதிகளை ஆலங்காயம் ஒன்றியத்தில் இணைக்க வேண்டும்.

கிருஷ்ணன்:- காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள பள்ளிபாளையம் மோட்டூர் உள்பட 4 ஊராட்சிகளை சோளிங்கர் ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்.

அருணகிரி:- ஆலங்காயத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும்.

நித்தியானந்தம்:- சோளிங்கர் ஒன்றியத்தில் உள்ள 8 கிராமங்களை காட்பாடி ஒன்றியத்துடன் இணைக்கிறார்கள். அதை வாலாஜா ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள், கட்சி பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். மேலும் மனுக்களாகவும் கொடுத்தனர்.

சிலர் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி தொடர்பான கோரிக்கைகளை கூறினர். அப்போது கலெக்டர் சண்முகசுந்தரம், ஊரக பகுதிகளுக்கான கருத்து கேட்பு கூட்டத்தில் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி தொடர்பாக கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டாம் என்றார். இக்கூட்டத்தில் 3 மாவட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்துக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் பலர் வருகை தருவார்கள் எனவே கூச்சல் குழப்பம் போன்ற பிரச்சினைகள் எழும் என மாவட்ட காவல்துறை கருதி அதிக அளவிலான போலீசரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் அமர்த்தியிருந்தனர்.

Next Story