அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் ஆதரவு அளித்ததால் காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரானார், சுயேச்சை


அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் ஆதரவு அளித்ததால் காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரானார், சுயேச்சை
x
தினத்தந்தி 12 Jan 2020 4:30 AM IST (Updated: 11 Jan 2020 10:57 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் ஆதரவு அளித்ததால் காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக சுயேச்சை கவுன்சிலர் மகேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

காங்கேயம்,

காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் 11 வார்டுகளுக்கு கடந்த மாதம் 27-ந்தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த 5 பேர், தி.மு.க.வை சேர்ந்த 3 பேர், காங்கிரசை சேர்ந்த ஒருவர் மற்றும் சுயேச்சைகள் 2 பேர் என வெற்றி பெற்றனர். இதில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவுன்சிலர் இணைந்ததால் தி.மு.க.வின் பலம் 5 ஆக உயர்ந்தது.

அ.தி.மு.க., தி.மு.க. இரு அணியினரும் தலா 5 என சமபலத்தை பெற்றதால் எஞ்சிய சுயேச்சை கவுன்சிலர் மகேஷ்குமார் தான் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யும் இடத்தில் இருந்தார். இந்த நிலையில் சுயேச்சை கவுன்சிலர் டி.மகேஷ்குமார் தானே ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட தீர்மானித்தார். இதனால் அவர் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற கவுன்சிலர்களிடம் தனக்கு ஓட்டு போடுமாறு ஆதரவு திரட்டினார்.

அணி மாறிய அ.தி.மு.க. கவுன்சிலர்

இதே போல 7-வது வார்டில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. கவுன்சிலர் மைனர் பழனிசாமி தலைவர் பதவிக்கு வெற்றி பெற ஆதரவு திரட்டிவந்தார். இந்த நிலையில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவில் அ.தி.மு.க. கவுன்சிலர் அய்யனார் என்பவர் மகேஷ்குமார் அணிக்கு தாவினார். இதனால் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.விழா மேடையிலேயே அ.தி.மு.க.வினருக்கும், மகேஷ்குமார் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அய்யனாரை கடத்தி செல்வதில் இரு அணியினரும் தீவிரம் காட்டினர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அய்யனார் அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. காலை 10 மணியளவில் சுயேச்சை கவுன்சிலர் மகேஷ்குமாருடன் தி.மு.க. கூட்டணி கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர்.அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள் அய்யனார், மயிலாத்தாள் ஆகிய இருவரும் வந்திருந்தனர். இதனால் மகேஷ்குமாருடன் சேர்த்து அவரது அணியின் பலம் 8 ஆக உயர்ந்தது.

தலைவராக தேர்வு

இதற்கிடையே காங்கேயம் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்காக மகேஷ்குமார் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார்.அ.தி.மு.க சார்பில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.பின்னர் பகல் 11 மணி வரை அ.தி.மு.க.வை சேர்ந்த மைனர் பழனிசாமி உள்பட 3 அ.தி.மு.க கவுன்சிலர்களும் வரவில்லை.

இதைத்தொடர்ந்து மகேஷ்குமாருக்கு எதிராக யாரும் போட்டியிடாததால் காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி சீனிவாச பிரபு அறிவித்தார்.

வெற்றி பெற்ற மகேஷ்குமாருக்கு அவரது ஆதரவாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் மகேஷ்குமார் கூறியபோது, “தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான், கட்சி பேதமின்றி காங்கேயம் ஒன்றியப்பகுதி மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்கள், அடிப்படை வசதிகளை முதல்-அமைச்சர், மற்றும் துணை முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்து பெற்றுத்தருவேன்” என்றார்.

துணைத்தலைவர் தேர்வு

இதையடுத்து காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது.

இதில் துணைத்தலைவராக 8-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ஜீவிதா ஜவகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Next Story