கோவை மாவட்டத்தில் ரூ.130 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்


கோவை மாவட்டத்தில் ரூ.130 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
x
தினத்தந்தி 12 Jan 2020 4:15 AM IST (Updated: 11 Jan 2020 11:38 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் ரூ.130 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி-சேலைகள் வழங்கப் படுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

கோவை சுகுணாபுரம், கரும்புக்கடை, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 மற்றும் இலவச வேட்டி-சேலைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள 9 லட்சத்து 70 ஆயிரத்து 689 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் தலா ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 88 ஆயிரத்து 923 பயனாளிகளுக்கு இலவச சேலைகளும், 6 லட்சத்து 84 ஆயிரத்து 468 பயனாளிகளுக்கு இலவச வேட்டிகளும் வழங்கப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.129 கோடியே 96 லட்சமாகும்.

மேலும், பொங்கல் திருநாளில் இச்சிறப்புத் திட்டத்தில் யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் மாவட்ட வழங்கல் துறையின் மூலம் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அதற்காக சர்க்கரை ரேஷன்கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றும் சிறப்பு முகாம்கள் செயல்படுத்தப்பட்டது.

இந்த முகாம்களில் கோவை மாவட்டத்தில் 35 ஆயிரம் சர்க்கரை கார்டுகள் அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி வாங்குவதற்கு ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன், கோட்ட வருவாய் அதிகாரி தனலிங்கம், உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story