ஓடும் ரெயிலில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
திருப்பூர் அருகே ஓடும் ரெயிலில் மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கோவை,
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் பானுமதி (வயது 66). இவர் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 13-ந் தேதி குடும்பத்தினருடன் கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு சுற்றுலா சென்றார். இதற்காக அவர் சேலத்தில் இருந்து யஷ்வந்த்பூர்- கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
அந்த ரெயில் திருப்பூர் ரெயில் நிலையத்தில் நின்று புறப்பட்டது. அப்போது பானுமதி அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்த ஒரு மர்ம ஆசாமி ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோவை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, பானுமதியிடம் தங்க சங்கிலியை பறித்ததாக மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த உத்தம்பட்டேல் (34 )என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு கோவை 6-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கண்ணன், மூதாட்டியிடம் 10 பவுன் நகை பறித்த வடமாநில வாலிபர் உத்தம்பட்டேலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 9 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் தங்கராஜ் ஆஜரானார். உத்தம்பட்டேல் மீது வேலூர் உள்பட பல்வேறு ரெயில் நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story