ஜி.எஸ்.டி. சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தம் - பொதுமக்கள் அவதி


ஜி.எஸ்.டி. சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி மந்தம் - பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 12 Jan 2020 3:45 AM IST (Updated: 11 Jan 2020 11:38 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட் டத்தில் உள்ள சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஜி.எஸ்.டி. சாலையோரத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெறுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் இருந்து பரனூர் சுங்கச்சாவடி வரை உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி சாலையாக மாற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜி.எஸ்.டி. சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையோரமாக மழைநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கும் பணிகளை செய்ய முடிவு செய்தனர். இந்தநிலையில் கால்வாய் அமைப்பதற்கு வசதியாக சாலையோரம் பெரிய அளவில் பள்ளங்கள் தோண்டப்பட்டது. ஆனால் பல நாட்களாகியும் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்படாமல் மந்தமான நிலையில் உள்ளது.

இதனால் இரவு நேரங்களில் இப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் பலநேரங்களில் கால்வாய்களில் தவறி விழுந்து விடுகின்றனர்.மேலும் சாலை ஓரமாக உள்ள கடைகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கும் சிரமப்படுகின்றனர்.

இந்த கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் கழிவுநீரும், மழைநீரும் தேங்கிவிடுவதால், கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மழை காலங்களில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தேங்கிய கழிவுநீர் நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் ஆறாக பெருக்கெடுத்தும் ஓடுகிறது. எனவே மழைநீர் செல்வதற்காக தோண்டப்பட்ட கால்வாய் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்தி முடிக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story