இருபிரிவாக வந்ததால் பரபரப்பு: ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க.வினர் இடையே கடும் போட்டி - குலுக்கல் முறையில் ரமேஷ் தேர்வு
ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க.வினர் இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து குலுக்கல் முறையில் தலைவராக ரமேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் யூனியன் தலைவருக்கான தேர்தல், தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார் தலைமையில் நேற்று காலையில் நடந்தது. ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து யூனியனில் 22 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், தி.மு.க. 12 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், சுயேச்சை 2 வார்டிலும் வெற்றி பெற்று உள்ளது. இங்கு தி.மு.க. கவுன்சிலர்கள் இருபிரிவாக உள்ளனர். ஒரு பிரிவினர் 1-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் தலைமையிலும், மற்றொரு தரப்பினர் 10-வது வார்டு கவுன்சிலர் காசிவிசுவநாதன் தலைமையிலும் உள்ளனர். இவர்கள் பதவியேற்பின் போதே இருபிரிவாக வந்து பதவியேற்றனர்.
அதேபோன்று நேற்றும் யூனியன் அலுவலகத்துக்கு இருபிரிவாக வந்தனர். முதலில் ரமேஷ் தலைமையில் 11 பேரும், தொடர்ந்து காசிவிசுவநாதன் தலைமையில் 11 பேரும் வந்தனர். இதில் காசிவிசுவநாதனுடன், அ.தி.மு.க.வை சேர்ந்த 5 கவுன்சிலர்களும் சேர்ந்து வந்தனர். தொடர்ந்து மறைமுக தேர்தல் நடந்தது. அப்போது ரமேசும், காசிவிசுவநாதனும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து ஓட்டுப்பதிவு நடந்தது. அப்போது இருவரும் தலா 11 ஓட்டுக்கள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனால் இருதரப்பினர் இடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது.
அதன்பிறகு மாநில தேர்தல் ஆணைய விதிமுறையின்படி குலுக்கல் முறை கடைபிடிக்கப்பட்டது. அதன்படி 2 பேரின் பெயர்களும் தனித்தனி சீட்டுகளில் எழுதி ஒரு டப்பாவில் போடப்பட்டது. ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், ஒரு சீட்டை தேர்வு செய்தார். அதில் ரமேஷ் பெயர் வந்தது. இதனால் அவர் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து யூனியன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ரமேஷ் தரப்பினர் உற்சாகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பின்னர் யூனியன் தலைவர் ரமேஷ், தீர்மான புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
இதன்பிறகு மாலையில் துணைத்தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதிலும் இரு தரப்பினர் இடையே கடும் போட்டி நிலவியது. ரமேஷ் தரப்பை சேர்ந்த 6-வது வார்டு சுயேச்சை வேட்பாளர் கரியம்மாள் அழகு வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த, யூனியன் தலைவர் பதவியில் தோல்வியடைந்த 10-வது வார்டு கவுன்சிலர் காசிவிசுவநாதன் மீண்டும் வேட்பு மனுதாக்கல் செய்தார். பின்னர் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் காசிவிசுவநாதன் 12 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். கரியம்மாள் அழகு 10 ஓட்டுக்கள் பெற்று தோல்வியை தழுவினார்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சண்முகையா எம்.எல்.ஏ., தொழில்அதிபர் முருகேசபாண்டியன் ஆகியோரிடம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட யூனியன் தலைவர் ரமேஷ் வாழ்த்து பெற்றார்.
மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story