சிகிச்சை பெற்று குணமாகும் வரை காத்திருக்கிறோம்: தி.மு.க. வெற்றி பெறக்கூடிய இடங்களில் தேர்தல் அலுவலர்களுக்கு தொற்று நோய் - கனிமொழி எம்.பி. பேட்டி
தமிழகம் முழுவதும் தி.மு.க. வெற்றி பெறக்கூடிய இடங்களில் தேர்தல் அலுவலர்களுக்கு தொற்று நோய் ஏற்பட்டு உள்ளதாக கனிமொழி எம்.பி. கூறினார். இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவில்பட்டி,
தமிழகத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கான தேர்தலில், தி.மு.க. வெற்றி பெறக்கூடிய இடங்களில் எல்லாம் வாக்கு எண்ணிக்கையை நடத்தாமல், தேர்தல் அலுவலர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி, அ.தி.மு.க.வினர் குழப்பத்தை ஏற்படுத்தி வன்முறையை தூண்டி அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து அந்தந்த பகுதிகளில் உள்ள தி.மு.க. தலைமை பொறுப்பாளர்கள், தேர்தல் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கோவில்பட்டி யூனியனிலும் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தாமல், தேர்தல் அலுவலருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்று கூறி, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உள்ளனர். இவ்வாறு தமிழகம் முழுவதும் தி.மு.க. வெற்றி பெறக்கூடிய இடங்களில் எல்லாம் ஒரே நேரத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்படும் வகையில், தொற்று நோய் உருவாகி உள்ளது. எனவே, இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்.
தேர்தல் அலுவலர்களுக்கு நல்ல மருத்துவர்களை அழைத்து வந்து சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கி அவர்களுக்கு நோய் குணமாகும் வரையிலும் காத்திருந்து தேர்தலை நடத்துமாறு கூறி காத்திருக்கின்றோம். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடமும், தேர்தல் ஆணையத்திடமும் தெரிவித்து உள்ளோம். எனவே, அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள்? என்பதை அறியும் வரையிலும் பொறுமையாக காத்திருக்கின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story