சங்கரன்கோவில் அருகே, பணம் கொடுக்கல் - வாங்கல் தகராறில் வேன் கடத்தல்; 3 பேர் கைது
சங்கரன்கோவில் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட வேனை, சினிமா பாணியில் போலீசார் துரத்திச் சென்று மீட்டனர்.
சங்கரன்கோவில்,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் அழகுதுரை. இவர் சொந்தமாக வேன் வைத்துள்ளார். முத்துசாமியாபுரத்தை சேர்ந்த மரியதேவதாஸ் மகன் ஸ்டீபன் என்பவர் டிரைவராக இருந்து வந்துள்ளார். நெல்லையில் டிராவல்ஸ் நடத்தி வரும் அழகுதுரையின் நண்பருக்கு, குருக்கள்பட்டியை சேர்ந்த சிலருடன் பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குருக்கள்பட்டி பகுதியை சேர்ந்த சிலர், திருச்செந்தூர் செல்வதற்காக நெல்லையில் டிராவல்ஸ் நடத்தி வருபவரிடம் வேன் வாடகைக்கு கேட்டுள்ளனர். அவர் தனக்கு தெரிந்தவரான அழகுதுரையிடம் கூறி வேன் அனுப்பியுள்ளார். அவர் தனது டிரைவரான ஸ்டீபனிடம் கூறி வேனை எடுத்து செல்ல கூறியுள்ளார். வேனில் சரவணன், மணிகண்டன், விக்னேஷ் உள்ளிட்டவர்கள் சென்றதாக தெரிகிறது.
சங்கரன்கோவில் அருகே பெருமாள்பட்டி அருகே சென்றபோது டீ சாப்பிட நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் குருக்கள்பட்டியை சேர்ந்த அருண்குமார் வந்துள்ளார். டீ சாப்பிட்டபோது திடீரென மணிகண்டன் வேனை எடுத்து சென்றுள்ளதாக தெரிகிறது. அதில் சரவணன் உடன் சென்றுள்ளார். மேலும் அருண்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் ஸ்டீபன், இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து போலீசார் அருகில் உள்ள காவல் நிலைய சோதனை சாவடிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து உஷாரான போலீசார் வாடிக்கோட்டை விலக்கில் வேனை விரட்டி பிடித்து மடக்கினர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணன், அருண்குமார், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய விக்னேசை தேடி வருகின்றனர். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் வேன் கடத்தப்பட்டதும், சினிமா பாணியில் போலீசார் துரத்திச் சென்று மீட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story