மாவட்ட செய்திகள்

விருதுநகர் அருகே ஆயுதங்களுடன் புகுந்து தாக்கிய கும்பல்: துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு அரிவாள் வெட்டு்; அலுவலகம் சூறை + "||" + Armed gang raiding near Virudhunagar Office snoring

விருதுநகர் அருகே ஆயுதங்களுடன் புகுந்து தாக்கிய கும்பல்: துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு அரிவாள் வெட்டு்; அலுவலகம் சூறை

விருதுநகர் அருகே ஆயுதங்களுடன் புகுந்து தாக்கிய கும்பல்: துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு அரிவாள் வெட்டு்; அலுவலகம் சூறை
விருதுநகர் அருகே நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலின் போது ஆயுதங்களுடன் புகுந்து ஒரு கும்பல் தாக்கியது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. வன்முறை காரணமாக ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 14 வார்டுகள் உள்ளன. இதில் 5 இடங்களில் அ.தி.மு.க.வும், 6 இடங்களில் தி.மு.க.வும் அ.ம.மு.க. 1 இடத்திலும் சுயேச்சைகள் 2 இடத்திலும் வென்றனர்.

இதில் தலைவர் மற்றும் துணைதலைவரை தேர்ந்தெடுக்க நேற்று மறைமுக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை 11 மணிக்கு தேர்தல் தொடங்கியது. தேர்தல் அலுவலராக வெங்கடேசுவரன் இருந்தார்.


அலுவலகத்துக்குள் கவுன்சிலர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுடைய ஆதரவாளர்கள் வெளியே திரண்டு இருந்தனர். மேலும் அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கல்வீச்சு

தேர்தலில் அ.தி.மு.க. தரப்பில் பஞ்சவர்ணமும், தி.மு.க. தரப்பில் காளீஸ்வரியும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதைதொடர்ந்து கவுன்சிலர்களுக்கான ஓட்டு பதிவு நடைபெற்றது. இதில் இரண்டு தரப்புக்கும் சமநிலை நிலவியதால் இரு கட்சியினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் வெளியே திரண்டிருந்தவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் அரிவாளுடன் ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்ததோடு சரமாரியாக கல்வீச்சு நடத்தினர். அப்போது அங்கிருந்த போலீசார் வன்முறையை தடுக்க முயன்றனர். கல்வீச்சையும் சமாளிக்க முடியவில்லை.

அரிவாள்வெட்டு

அரிவாளுடன் வந்த ஒருவரை தடுத்து நிறுத்த துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் முயற்சி செய்தார். அப்போது அவரது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது.

மேலும் அலுவலகத்தில் புகுந்த கும்பல் அங்கிருந்த கம்ப்யூட்டர்களை அடித்து நொறுக்கினர். மேலும் அலுவலகத்தின் முன்பு போடப்பட்டிருந்த நாற்காலிகளையும் அடித்து நொறுக்கி சூறையாடினர். அலுவலகத்தில் வேலை செய்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கும் கல்வீச்சில் காயம் ஏற்பட்டது.

தேர்தல் ரத்து

தாக்குதலில் ஈடுபட்ட சிலரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த நிலையில் அலுவலக கூட்ட அரங்கத்தில் இருந்த கவுன்சிலர்களை அறையில் வைத்து பூட்டி போலீசார் பாதுகாத்தனர்.

இந்த வன்முறை சம்பவத்தால் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கவுன்சிலர்கள் வெளியே சென்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் அங்கு நேரில்வந்து பார்வையிட்டார். நரிக்குடி ஒன்றிய அலுவலக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

2 பேர் கைது

இந்த நிலையில் ரகளையில் ஈடுபட்டதாக கமுதியை சேர்ந்த பாலா(வயது30), நத்தகுளத்தை சேர்ந்த குமார்(28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் அருகே பெண்ணை தாக்கிய 5 பேர் கைது
திருவள்ளூர் அருகே பெண்ணை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. வன்முறையின் போது சூறையாடப்பட்ட டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
வன்முறையின் போது சூறையாடப்பட்ட டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் நேற்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை