போலீஸ் போல் நடித்து நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி தங்கம் கொள்ளை - 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
போலீஸ் போல் நடித்து ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பூர்,
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 20). தங்க நகை வியாபாரியான இவர், 2 நாட்களுக்கு முன்பு நெல்லூரில் இருந்து சென்னைக்கு தங்கம் வாங்குவதற்காக ரூ.1 கோடியே 23 லட்சத்துடன் வந்தார்.
சவுகார்பேட்டை பாரிமுனை பகுதிகளில் தங்கக்கட்டிகள் மற்றும் பொருட்கள் வாங்கிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு நெல்லூர் செல்வதற்காக சவுகார்பேட்டையில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு யானைகவுனி வழியாக நடந்து சென்றார். அவரிடம் இருந்த பையில் 4 தங்கக்கட்டிகள் மற்றும் பொருட்களை வைத்து இருந்தார்.
அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் தினேஷ்குமாரை வழிமறித்து நிறுத்தினர். அவரிடம், “நாங்கள் டெல்லி சிறப்புபடை போலீஸ். நீ யார்?. எங்கிருந்து வருகிறாய்?. பையில் என்ன வைத்து உள்ளாய்? என்று கேட்டு அவரிடம் தங்க நகை இருந்த பையை சோதனை செய்ய முயன்றனர்.
அதற்கு தினேஷ்குமார் மறுத்தார். உடனே அவர்கள், போலீஸ் நிலையம் வரும்படி அழைத்தனர். இதனால் பயந்துபோன தினேஷ்குமார், தன்னிடம் இருந்த பையை அவர்களிடம் காண்பித்தார். பையை சோதனை செய்த அந்த கும்பல், அதை மீண்டும் தினேஷ்குமாரிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.
அதன்பிறகு தினேஷ்குமார், தனது பையை திறந்து பார்த்தார். அதில் வைத்து இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 4 தங்ககட்டிகள் மட்டும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகுதான் மர்மகும்பல், போலீஸ் போல் நடித்து தன்னிடம் இருந்த தங்க கட்டியை கொள்ளையடித்து சென்றுவிட்டது தினேஷ்குமாருக்கு தெரியவந்தது.
இதுபற்றி அவர் யானைக்கவுனி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட தனிப்படை போலீசார், 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களின் உருவம் மற்றும் அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றியவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story