குடும்பத்தோடு கஞ்சா விற்ற மூதாட்டி


குடும்பத்தோடு கஞ்சா விற்ற மூதாட்டி
x
தினத்தந்தி 12 Jan 2020 3:45 AM IST (Updated: 12 Jan 2020 12:34 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தோடு கஞ்சா விற்ற மூதாட்டியை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் ஒரு குடும்பமே கஞ்சா விற்பதாக ஆதம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர் உத்தரவின்பேரில் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் சவுரிநாதன் மேற்பார்வையில் ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆதம்பாக்கம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த ஒரு கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் ஒரு மூதாட்டியை தவிர மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிப்பட்ட மூதாட்டியை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர், ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பெர்னர்ட்(வயது 65) என்பதும், தப்பி ஓடியவர்கள் இவருடைய மகள், மருமகன், பேரன்கள் என்பதும் தெரிந்தது. மூதாட்டி பெர்னர்ட், தனது மகள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, அதை சிறு சிறு பொட்டலங்களாக பாக்கெட்டில் அடைத்து விற்றது தெரிந்தது.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் மூதாட்டி பெர்னர்ட்டை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான மூதாட்டி சிறையில் அடைக்கப்பட்டார். தப்பி ஓடிய அவருடைய மகள் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story