ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் முறைகேடு புகார்: கிராம மக்கள் மறியல்-தர்ணா


ஊராட்சி துணைத்தலைவர் தேர்தலில் முறைகேடு புகார்: கிராம மக்கள் மறியல்-தர்ணா
x
தினத்தந்தி 11 Jan 2020 10:30 PM GMT (Updated: 11 Jan 2020 7:04 PM GMT)

கொடைரோடு, பட்டிவீரன்பட்டி பகுதியில் ஊராட்சி துணைத்தலைவருக்கான தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி கிராம மக்கள் மறியல்-தர்ணாவில் ஈடுபட்டனர்.

கொடைரோடு,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள மாலையகவுண்டன்பட்டி ஊராட்சியில் 9 பேர் வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஊராட்சியில் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் 6-வது வார்டு உறுப்பினர் கார்த்திகா, 4-வது வார்டு உறுப்பினர் மாலன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயா முன்னிலையில் தேர்தல் நடந்தது.

மாலையகவுண்டன்பட்டி ஊராட்சி தலைவர் மாயக்காள் உள்பட 10 பேர் ஓட்டு போட்டனர். இந்த தேர்தலில் மாலன், கார்த்திகா ஆகியோருக்கு தலா 5 ஓட்டுகள் கிடைத்தன. இதனால் சமநிலை ஏற்பட்டது. இதனையடுத்து குலுக்கல் முறையில் துணைத்தலைவர் தேர்வு நடைபெற்றது. இதில் துணைத்தலைவராக மாலன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு கார்த்திகா தரப்பினர் மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் மாலையகவுண்டன்பட்டி சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். மேலும் கார்த்திகாவுக்கு ஆதரவாக 6 பேர் ஓட்டு போட்டதாகவும், இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டினர். எனவே மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொடைரோடு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கிராம மக்கள் சமரசம் அடைந்தனர். இதற்கிடையே வார்டு உறுப்பினர்கள் 6 பேரும், மறுதேர்தல் நடத்தக்கோரி நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று மனு கொடுத்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு ஊராட்சி மன்றத்தில், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மகேஸ்குமார் தலைமையில் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இந்த பதவிக்கு 4-வது வார்டு உறுப்பினர் இருளாயி மற்றும் 9-வது வார்டு உறுப்பினர் எழில்மாறன் ஆகியோர் போட்டியிட்டனர்.

ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் 15 பேர் என மொத்தம் 16 பேர் வாக்களித்தனர். இறுதியில் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டன. இதில் எழில்மாறனுக்கு 9 ஓட்டுகளும், இருளாயிக்கு 7 ஓட்டுகளும் பதிவானதாகவும் 2 ஓட்டுகள் வித்தியாசத்தில் எழில்மாறன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு சித்தரேவு ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 8 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஊராட்சி மன்ற வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கூறினர்.


இதற்கிடையே இருதரப்பை சேர்ந்தவர்களும் அங்கு குவிந்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலரை போகவிடாமல் தடுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் தாசில்தார் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறுதேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்றும், கோர்ட்டை அணுகி தீர்வு பெறலாம் என்றும் கூறினர்.

இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுபற்றி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மகேஸ்குமார் கூறும்போது, தேர்தலில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் நடந்தபோது அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் கூக்கால் கிராமத்தில் 9 வார்டுகள் உள்ளன. இங்கு துணைத்தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ராஜாத்தி, ராஜம்மாள் ஆகியோர் போட்டியிட்டனர். முடிவில் ராஜம்மாள் துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக வார்டு உறுப்பினர்கள் 6 பேர் புகார் கூறியுள்ளனர். தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே வார்டு உறுப்பினர்கள் 6 பேரிடம் கையெழுத்து வாங்கி விட்டதாகவும், எனவே முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். தவறும் பட்சத்தில் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக ஊராட்சி உறுப்பினர்கள் ராஜாத்தி, தமிழ்செல்வி, சுமித்ரா, ராதா, மல்லிகா மற்றும் அருண்குமார் ஆகியோர் ஆ.டி.ஓ. சுரேந்திரனிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ. இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story