தேர்தல் அலுவலருக்கு திடீர் நெஞ்சுவலி: நல்லூர் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு


தேர்தல் அலுவலருக்கு திடீர் நெஞ்சுவலி: நல்லூர் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 11 Jan 2020 10:30 PM GMT (Updated: 11 Jan 2020 8:01 PM GMT)

தேர்தல் அலுவலருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், நல்லூர் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் கவுன்சிலர்கள், அரசியல் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வேப்பூர், 

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் மொத்தம் 21 வார்டுகளை கொண்டதாகும். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. தலா 7 வார்டுகளிலும், பா.ம.க. 2, சுயேச்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் ஒன்றியக்குழு தலைவர் பதவி அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பா.ம.க. கவுன்சிலர் செல்வி ஆடியபாதம் என்பவர் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் தி.மு.க.வில் முத்துக்கண்ணன் போட்டியிடுவதாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற இருந்தது. இதில் ஊராட்சி உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை 10 மணிக்கு கவுன்சிலர்கள் அனைவரும் நல்லூர் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர்.

ஆனால் தேர்தல் அலுவலர் ரவிச்சந்திரன் மட்டும் அங்கு வரவில்லை. மாறாக அவர் ஒன்றிய அலுவலகத்துக்கு போன் செய்தார். அதில், தனக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் தன்னால் அங்கு வர முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து மறைமுக தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

மேலும் அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் சலசலப்பு உருவானது. சிறிது நேரத்தில், ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், தேர்தல் அதிகாரி உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணத்தினால், இன்று(அதாவது நேற்று) நடைபெற இருந்த மறைமுக தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மறைமுக தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அங்கு திரண்டிருந்த அரசியல் கட்சியினர் மற்றும் கவுன்சிலர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டதால், அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

மேலும் ஒன்றிய அலுவலகத்துக்குள் யாரும் நுழையாத படி நுழைவு வாயில் முன்பு தடுப்புகளை வைத்திருந்தனர். தொடர்ந்து போலீசார், அங்கிருந்த கட்சி பிரமுகர்களை அமைதியாக கலைந்து போக வலியுறுத்தினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைய தொடங்கினர்.

இந்த சம்பவத்தால் ஒன்றிய வளாக பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Next Story