கள்ளக்காதலன் இறந்த இடத்தில் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை - நெல்லை அருகே பரபரப்பு


கள்ளக்காதலன் இறந்த இடத்தில் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை - நெல்லை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 12 Jan 2020 5:30 AM IST (Updated: 12 Jan 2020 1:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கள்ளக்காதலன் இறந்த இடத்தில் இளம்பெண் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை, 

நெல்லையை அடுத்த பேட்டை அருகே உள்ள மலையாளமேடு ரெயில்வே கேட் அருகில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் இதுகுறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி, அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த முருகன் மகள் கற்பகம் (வயது 25) என்பதும், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. கற்பகத்துக்கு திருமணம் ஆகி, 5 வயதில் மகன் உள்ளான். கருத்து வேறுபாடு காரணமாக அவர் கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கற்பகம் வேலை பார்த்து வந்த தனியார் நிறுவனத்தில், சுத்தமல்லி அருகே உள்ள நரசிங்கநல்லூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த என்ஜினீயர் மகராஜன் (26) என்பவரும் பணியாற்றி வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த கற்பகத்தின் பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் கற்பகம், மகராஜன் ஆகிய இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருப்பூர் சென்று, அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தம்பதி போல் வசித்து வந்தனர்.

இதற்கிடையே, தனது மகளை காணவில்லை என்று கற்பகத்தின் தந்தை முருகன் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, திருப்பூரில் மகராஜனுடன் குடும்பம் நடத்தி வந்த கற்பகத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ஆனால், அதன்பிறகும் மகராஜனுடனான தொடர்பை கற்பகத்தால் கைவிட முடியவில்லை. அவர்கள் பாளையங்கோட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்து வந்தனர். அப்போது தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளும்படி மகராஜனிடம் கற்பகம் வற்புறுத்தினார். இதுகுறித்து மகராஜன் தனது பெற்றோரிடம் கூறவே, அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கற்பகம் தன்னை மகராஜனுடன் சேர்த்து வைக்குமாறு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி, சம்பவம் நடந்த இடம் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால், அவர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மகராஜன் கற்பகம் சொல்வதை கேட்பதா? அல்லது பெற்றோர் சொல்படி நடப்பதா? என்று குழம்பி வேதனை அடைந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த 3-ந்தேதி வீட்டில் செல்போன், ஏ.டி.எம். கார்டு, பான்கார்டு உள்ளிட்டவற்றை வைத்துவிட்டு, மலையாளமேடு ரெயில்வே கேட் அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதை அறிந்த கற்பகம் மிகுந்த வேதனை அடைந்தார். மகராஜனின் உடலை பார்க்க விரும்பினார். ஆனால் அதற்கு அவருடைய பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து கற்பகம், மகராஜன் நினைவாகவே இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் கற்பகம் வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றார். அதன்பிறகு அவர் மகராஜன் இறந்த அதே இடத்தில், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கள்ளக்காதலன் இறந்த இடத்திலேயே இளம்பெண் ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story