மாவட்ட ஊராட்சி தலைவராக அ.தி.மு.க. திருமாறன் வெற்றி - தே.மு.தி.க. ரிஸ்வானா பர்வின் துணை தலைவரானார்
கடலூர் மாவட்ட ஊராட்சி தலைவராக அ.தி.மு.க. திருமாறன் வெற்றி பெற்றார். துணை தலைவராக தே.மு.தி.க. ரிஸ்வானா பர்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மாதம் 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 14 ஒன்றியங்களில் உள்ள 287 ஒன்றிய கவுன்சிலர்கள், 29 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 683 ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ந்தேதி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கடந்த 6-ந்தேதி பதவி ஏற்றனர். இதன்படி 287 ஒன்றிய கவுன்சிலர்கள், 29 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். ஒரு சிலர் தாமதமாக பதவி ஏற்றனர்.
இந்நிலையில் மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர்கள், துணை தலைவர்கள், ஊராட்சி மன்ற துணை தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. இதன்படி மாவட்ட ஊராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. மாவட்ட ஊராட்சி அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தொடர்ந்து கலெக்டர் அன்புசெல்வன் மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு வருகை தந்தார். பின்னர் காலை 10.45 மணி அளவில் தி.மு.க. மாவட்ட கவுன்சிலர்கள் 14 பேரும் ஒரே நேரத்தில் வந்தனர். அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 15 மாவட்ட கவுன்சிலர் களும் வந்தனர். அவர்களை நுழைவு வாயிலில் போலீசார் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். அதாவது மாவட்ட கவுன்சிலருக்கான சான்றிதழை காண்பித்தவுடன் மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்குள் செல்ல அனுமதித்தனர்.
ஆனால் அவர்களுடன் வந்த கட்சி நிர்வாகிகள் யாரையும் உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து 29 மாவட்ட கவுன்சிலர்களும் உள்ளே சென்று மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தனர். முன்னதாக மாவட்ட கவுன்சிலர்கள் தங்கள் கைகளில் கொண்டு சென்ற அனைத்து பொருட்களையும் போலீசார் வாசலில் நின்று வாங்கி பாதுகாப்பாக வைத்தனர். தொடர்ந்து காலை 11 மணிக்கு மாவட்ட ஊராட்சி அலுவலக கதவு பூட்டப்பட்டு மறைமுக தேர்தல் கலெக்டர் அன்புசெல்வன் தலைமையில் கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா முன்னிலையில் தொடங்கியது. அப்போது 29 மாவட்ட கவுன்சிலர்கள், அதிகாரிகளை தவிர வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 25-வது வார்டு அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் திருமாறன் போட்டியிட்டார். தி.மு.க. கூட்டணி சார்பில் 22-வது வார்டு ம.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி போட்டியிட்டார். இதையடுத்து அனைவருக்கும் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டியில் வாக்குச்சீட்டை கவுன்சிலர்கள் செலுத்தினர்.
இறுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திருமாறன் 15 வாக்குகளும், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கந்தசாமி 14 வாக்குகளும் பெற்றனர். இதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் திருமாறன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு வெளியே நின்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தொடர்ந்து மதியம் 3.30 மணிக்கு மாவட்ட ஊராட்சி துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் மாவட்ட கவுன்சிலர்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. 24-வது வார்டு கவுன்சிலர் ரிஸ்வானா பர்வின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட கவுன்சிலர் தயாநிதி போட்டியிட்டார்.
இதையடுத்து வாக்குச்சீட்டு அடிப்படையில் கவுன்சிலர்கள் வாக்களித்தனர். அதில் ரிஸ்வானா பர்வினுக்கு 16 ஓட்டுகள் கிடைத்தது. தயாநிதிக்கு 13 ஓட்டுகளே கிடைத்தது. இதையடுத்து ரிஸ்வானா பர்வின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் தே.மு.தி.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஏற்கனவே மாவட்ட ஊராட்சி தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த மல்லிகா வைத்தியலிங்கம் இருந்தார். தற்போது மீண்டும் மாவட்ட ஊராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. துணை தலைவர் தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் உள்ள மாவட்ட கவுன்சிலர் ஒருவர் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட ரிஸ்வானா பர்வினுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story