மாவட்ட செய்திகள்

வத்திராயிருப்பு யூனியன் அலுவலகத்தை நொறுக்கிய கும்பல் + "||" + The mob that smashed the Vataraya Union office

வத்திராயிருப்பு யூனியன் அலுவலகத்தை நொறுக்கிய கும்பல்

வத்திராயிருப்பு யூனியன் அலுவலகத்தை நொறுக்கிய கும்பல்
வத்திராயிருப்பு யூனியன் தலைவர் தேர்தலின்போது பிரச்சினை ஏற்பட்டதால் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு யூனியன் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று காலை 11 மணியளவில் தொடங்கியது. மொத்தம் உள்ள 13 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் தி.மு.க. கூட்டணி 6 இடங்களையும், அ.தி.மு.க. 6 இடங்களையும், சுயேச்சை 1 இடத்திலும் வென்று இருந்தது.


காலை 11 மணி அளவில் 13 கவுன்சிலர்களும் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடக்கும் இடத்திற்கு வந்தனர். தேர்தல் அலுவலர் வர்கீஸ் தேர்தல் நடக்கும் அறைக்கு வந்ததும் அ.தி.மு.க. சார்பில் 13-வது வார்டில் வெற்றி பெற்ற சிந்துமுருகனும், தி.மு.க. சார்பில் 4- வது வார்டு கவுன்சிலர் கண்ணனும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர். பின்னர் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

வாக்குவாதம்

வாக்கு எண்ணிக்கையின் போது அ.தி.மு.க. வினருக்கும் தி.மு.க. வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி தி.மு.க.வினரை ஒரு அறையிலும் அ.தி.மு.க.வினரை ஒரு அறையிலும் அமர வைத்தனர்.

பின்னர் தேர்தல் முடிவை அறிவிக்காமல் தேர்தல் நடந்த அறையைவிட்டு தேர்தல் அதிகாரி வர்கீஸ் தன்னுடைய அறைக்கு சென்றார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிந்துமுருகன் தேர்தல் அலுவலரிடம் முறையாக வாக்குச்சீட்டு தயார்படுத்தவில்லை என்றும் வேட்பாளர்களின் பெயர் சிறியதாக இருந்தது எனவும் வாக்குச்சீட்டில் குளறுபடி இருப்பதாகவும் கூறி மறுவாக்குப்பதிவு வேண்டும் என்று முறையிட்டார்.

சூறை

அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வெளியே இருந்த ஒரு கட்சியினர் திடீரென ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்துதேர்தல் நடைபெற்ற அறையில் இருந்த நாற்காலிகள், மேஜைகள் மற்றும் கணினி அறை கண்ணாடிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் அறையில் இருந்த ஆவணங்கள், நாற்காலிகள், மேஜைகள், ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அதன்பின்னரும் அ.தி.மு.க. வினரும் தி.மு.க. வினரும் அங்கு திரண்டு நின்று கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வேட்பாளர்கள் இடையில் மோதல் ஏற்பட்டதாலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடித்து உடைத்ததாலும் தேர்தல் விதிகளை மீறி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

பதற்றம்

தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். சூறையாடப்பட்ட அலுவலகத்தை பார்வையிட்டனர்.

வத்திராயிருப்பு நகரில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து புள்ளிமான் வேட்டை - மேலும் ஒரு வெடிகுண்டு சிக்கியது
வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து புள்ளிமானை கொன்ற கும்பலை வனத்துறையினர் தேடிவருகின்றனர். மேலும் ஒரு வெடிகுண்டை கைப்பற்றினார்கள்.