அவினாசி பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு


அவினாசி பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 11 Jan 2020 10:38 PM GMT (Updated: 11 Jan 2020 10:38 PM GMT)

திருப்பூர் அவினாசி பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் அவினாசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாாி பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் சேவூர்- அவினாசி ரோடு, அவினாசி பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள தற்காலிக தள்ளுவண்டி கடைகளில் விற்பனை செய்யப்படும் இட்லி, பானிபூரி, சூப், சில்லிசிக்கன், மீன் வறுவல் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. 25 கடைகளில் ஆய்வு செய்த அலுவலர்கள் உணவு விற்பனையாளர்களுக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

மேலும் சில்லி, வறுவல் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்க செயற்கை நிறமிகள் பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. உணவு பொருட்களை பொறிக்க ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்த கூடாது என்றும், உணவு பொருட்களை செய்தித்தாளை பயன்படுத்தி பொட்டலமிட்டுக் கொடுக்க கூடாது என்றும் கூறப்பட்டது.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகளில் உணவு பொருட்களை வழங்க கூடாது. ஒரு முறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் கரண்டிகளை பயன்படுத்த கூடாது. உணவு வணிகம் செய்ய உணவு பாதுகாப்பு துறையின் பதிவுச் சான்று பெறுவது கட்டாயம் என்றும், உணவு பாதுகாப்பு சட்ட விதி மற்றும் நெறிமுறைகளை பின்பற்றாத கடையின் உரிமையாளர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


Next Story