திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது: துணைத்தலைவராக சுயேச்சை தேர்வு


திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது: துணைத்தலைவராக சுயேச்சை தேர்வு
x
தினத்தந்தி 12 Jan 2020 4:33 AM IST (Updated: 12 Jan 2020 4:33 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது. துணைத்தலைவராக சுயேச்சை தேர்வு செய்யப்பட்டார்.

திருப்பூர்,

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 8 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் 1-வது வார்டில் சொர்ணாம்பாள்(அ.தி.மு.க.), 2-வது வார்டில் தேவிஸ்ரீ(சுயேச்சை), 3-வது வார்டில் ரத்தினம்மாள்(தி.மு.க.), 4-வது வார்டில் சங்கீதா(அ.தி.மு.க.), 5-வது வார்டில் ஐஸ்வர்யா மகராஜ்(அ.தி.மு.க.), 6-வது வார்டில் ஜானகி(காங்கிரஸ்), 7-வது வார்டில் பாலசுப்பிரமணி(தி.மு.க.), 8-வது வார்டில் கல்பனா(அ.தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அதன்படி அ.தி.மு.க. 4 வார்டுகளையும், தி.மு.க. 2 வார்டுகளையும், காங்கிரஸ் 1 வார்டையும், சுயேச்சை 1 வார்டையும் கைப்பற்றின. ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் கடந்த 6-ந் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.

தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தும் அதிகாரியான உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியம் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.

8 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் கூட்ட அரங்குக்கு வந்தனர். தலைவர் பதவிக்கு 1-வது வார்டு உறுப்பினர் சொர்ணாம்பாள்(அ.தி.மு.க.), 3-வது வார்டு உறுப்பினர் ரத்தினம்மாள்(தி.மு.க.) ஆகியோர் போட்டியிட்டனர். காலை 11 மணிக்கு வாக்குச்சீட்டுகள் மூலமாக வார்டு உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சொர்ணாம்பாள் 5 ஓட்டுகள் பெற்று ஒன்றியக்குழு தலைவரானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரத்தினம்மாள் 3 ஓட்டுகள் பெற்றார்.

மாலையில் துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. துணைத்தலைவருக்கு 2-வது வார்டு உறுப்பினர் தேவிஸ்ரீ(சுயேச்சை), 6-வது வார்டு உறுப்பினர் ஜானகி(காங்கிரஸ்) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தேவிஸ்ரீ 5 ஓட்டுகள் பெற்று துணைத்தலைவரானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜானகி 3 ஓட்டுகள் பெற்றார். தலைவர், துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதும் ஒன்றியக்குழுவின் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். அவர்களுக்கு மற்ற கவுன்சிலர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பட்டாசு வெடித்து அ.தி.மு.க.வினர் வெற்றியை கொண்டாடினார்கள். திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது. துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தேவிஸ்ரீ சுயேச்சையாக போட்டியிட்டாலும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் ஆவார்.

வெற்றி பெற்றவர்களுக்கு திருப்பூர் வடக்கு தொகுதி விஜயகுமார் எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.


Next Story