திருப்பூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை தி.மு.க. வென்றது: அ.தி.மு.க.வுக்கு-4, சுயேச்சைக்கு-2


திருப்பூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை தி.மு.க. வென்றது: அ.தி.மு.க.வுக்கு-4, சுயேச்சைக்கு-2
x
தினத்தந்தி 11 Jan 2020 11:21 PM GMT (Updated: 11 Jan 2020 11:21 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. வென்றது. அ.தி.மு.க. 4 ஒன்றியங்களிலும், சுயேச்சை 2 ஒன்றியங்களிலும் தலைவர் பதவியை கைப்பற்றியது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கு நேற்று காலை 11 மணிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல்கள் நேற்று மதியம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சத்தியபாமா வெற்றி பெற்றார். மதியம் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த சிவகாமி துணைத்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

13 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் தாராபுரம், குடிமங்கலம், காங்கேயம், மடத்துக்குளம், மூலனூர், பொங்கலூர், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் போட்டி ஏற்பட்டு வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடைபெற்றது.

தாராபுரம், மடத்துக்குளம், மூலனூர், பல்லடம், பொங்கலூர், உடுமலை, ஊத்துக்குளி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. அவினாசி, குடிமங்கலம், திருப்பூர், வெள்ளகோவில் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க. வென்றது. காங்கேயம், குண்டடம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியை சுயேச்சை வென்றது.

மதியம் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தலில் அவினாசி, தாராபுரம், குடிமங்கலம், காங்கேயம், மடத்துக்குளம், மூலனூர், பல்லடம், பொங்கலூர், உடுமலை, ஊத்துக்குளி ஒன்றியங்களில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 3 ஊராட்சிகளில் போட்டி ஏற்பட்டு வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல் நடைபெற்று அதிக வாக்குகள் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 2 வேட்பாளர்கள் சமவாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் அ.தி.மு.க.வை சேர்ந்த சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி துணைத்தலைவராக தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நேற்று காலை அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொங்கூர் ஊராட்சி, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெல்லம்பட்டி, எல்லப்பாளையம்புதூர் ஊராட்சிகளில் போதுவான வார்டு உறுப்பினர்கள் பங்கேற்காததால்(கோரம்) மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அங்கு பின்னர் தேர்தல் நடத்தப்படும்.

மீதம் உள்ள 262 கிராம ஊராட்சிகளில் கிராம ஊராட்சி துணைத்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 55 ஊராட்சிகளில் பெரும்பான்மை வாக்கு அடிப்படையிலும் 20 ஊராட்சிகளில் குலுக்கல் முறையிலும் துணைத்தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 187 ஊராட்சிகளில் போட்டியின்றி துணைத்தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


Next Story