ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 8 தொழிலாளர்கள் உடல் சிதறி சாவு


ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 8 தொழிலாளர்கள் உடல் சிதறி சாவு
x
தினத்தந்தி 11 Jan 2020 11:51 PM GMT (Updated: 11 Jan 2020 11:51 PM GMT)

பால்கர் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள்.

மும்பை, 

பால்கர் மாவட்டம் பொய்சரில் மராட்டிய தொழில் மேம்பாட்டு கழகத்திற்குட்பட்ட (எம்.ஐ.டி.சி.) கோல்வாடே பகுதியில் ‘அங்க் பார்மா' என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. மும்பையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலையில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில், இரவு 7.20 மணியளவில் தொழிற் சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

ஆலையில் வெடி விபத்தினால் ஏற்பட்ட பயங்கர அதிர்வினால் அந்த பகுதியில் குடியிருப்பு கட்டிடங்கள் குலுங்கின. பல கட்டிடங்களில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

மேலும் பயங்கர வெடி சத்தம் அந்த பகுதியை சுற்றி 15 கி.மீ.க்கு கேட்டதாக கூறப் படுகிறது. இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த மக்கள் குண்டு தான் வெடித்து விட்டதோ என பதறி அடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

இந்த விபத்து பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு தொழிலாளர்கள் 8 பேர் உடல் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தனர். தீயணைப்பு படையினர் அவர்களது உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது உடல்கள் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. மேலும் வெடி விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். தொழிற்சாலை வெடி விபத்தில் 8 தொழிலாளர் கள் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story