மும்பையில் மின் கட்டணம் உயருகிறது
மும்பையில் மின்கட்டணத்தை உயர்த்த பெஸ்ட் முடிவு செய்து உள்ளது.
மும்பை,
மும்பையில் சயான் முதல் கொலபா வரை சுமார் 10 லட்சத்து 15 ஆயிரம் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மும்பை மாநகராட்சியின் பெஸ்ட் நிறுவனம் மின் வினியோகம் செய்து வருகிறது. இந்தநிலையில் மின் கட்டணத்தை 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்த பெஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் கட்டணத்தை அதிகரிக்க பெஸ்ட் நிறுவனம் மராட்டிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது.
இதேநேரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மின் கட்டணத்தை 1 சதவீதம் குறைக்க பெஸ்ட் முடிவு செய்து உள்ளது.
பெஸ்ட் தற்போது வீடுகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டுக்கு ரூ.1.45 கட்டணமாக வசூலித்து வருகிறது. இதை ரூ.1.55 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல 101 முதல் 300 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ரூ.3.70-யில் இருந்து ரூ.3.91 ஆகவும், 301 முதல் 500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.6.31-யில் இருந்து ரூ.6.65 ஆகவும், 500 யூனிட்டுகளுக்கு மேல், யூனிட் மின்சாரம் ரூ.7.72-யில் இருந்து ரூ.8.13 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.
இதேபோல வணிக கட்டிடங்களுக்கான மின்சார கட்டணமும் 5 முதல் 7 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது.
பொது மக்கள் வருகிற 31-ந் தேதி வரை மின் கட்டண உயர்வு குறித்து ஆட்சேபணைகளையும், ஆலோசனைகளையும் கூறலாம். மேலும் இதுதொடர்பாக அடுத்த மாதம் 4-ந் தேதி கப்பரடேவில் உள்ள உலக வர்த்தக மையத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.
இதுகுறித்து பெஸ்ட் நிர்வாக பொறியாளர் அனில் பாட்டீல் கூறும்போது, ‘‘கட்டண உயர்வு குறித்து மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தான் இனிமேல் முடிவு செய்யும்’’ என்றார்.
Related Tags :
Next Story