ராதாபுரம் அருகே, தோட்டத்து கிணற்று சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் சாவு - மற்றொரு சிறுவன் காயம்


ராதாபுரம் அருகே, தோட்டத்து கிணற்று சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் சாவு - மற்றொரு சிறுவன் காயம்
x
தினத்தந்தி 13 Jan 2020 4:00 AM IST (Updated: 12 Jan 2020 8:41 PM IST)
t-max-icont-min-icon

ராதாபுரம் அருகே தோட்டத்து கிணற்று சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனான். மற்றொரு சிறுவன் காயமடைந்து ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.

ராதாபுரம், 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே வையகவுண்டன்பட்டி நடுத்தெருவை சேர்ந்த வெற்றிவேல் மகன் மணிகண்டன்(வயது17). இவன் ராதாபுரத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தான். இதே ஊரை சேர்ந்தவன் அரவிந்தகுமார். இவன் பள்ளி ஒன்றில் 6–ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த 2 பேரும் நண்பர்கள். இவர்கள் நேற்று காலையில் ஊருக்கு அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்று சுவர் இடிந்து அந்த 2 பேர் மீதும் விழுந்தது. இதில் 2 பேரும் கிணற்றுக்குள் விழுந்தனர். தலையில் காயங்களுடன் அரவிந்தகுமார் தண்ணீருக்குள் இருந்து தப்பி மேலே வந்தான். பதறியவாறு மணிகண்டனை சிறிது நேரம் தேடிப்பார்த்தான்.

மணிகண்டன் தண்ணீரில் மூழ்கி விட்டதை உறுதி செய்த அவன், ஊருக்குள் ஓடிச்சென்று பெரியவர்களிடம் கூறினான். இதுகுறித்து வள்ளியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ கிணற்றுக்கு விரைந்து சென்றனர். கிணற்றுக்குள் மூழ்கி பிணமாக கிடந்த மாணவரான மணிகண்டனின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

அவனது உடலை பெற்றுக்கொண்ட போலீசார் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலையில் காயங்களுடன் தப்பிய அரவிந்தகுமார் ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் குறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story