பேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார் - பரோல் முடிந்து மகனை வழியனுப்பிய தாயார் அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி


பேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார் - பரோல் முடிந்து மகனை வழியனுப்பிய தாயார் அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி
x
தினத்தந்தி 12 Jan 2020 10:45 PM GMT (Updated: 12 Jan 2020 4:48 PM GMT)

பேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார் என்று மகனை வழியனுப்பிய தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க கூறினார்.

ஜோலார்பேட்டை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் கடந்த நவம்பர் மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார். அதன்படி, கடந்த நவம்பர் 12-ந் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டார். அதன்பிறகு பரோல் முடிந்து டிசம்பர் 13-ந் தேதி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்ல இருந்த நிலையில், மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2 மாதம் பரோல் முடிந்த நிலையில் நேற்று பேரறிவாளன் பலத்த போலீஸ் காவலுடன் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் மல்க மகனை வழியனுப்பினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2 மாதம் பரோல் முடிந்து இன்று (நேற்று) என் மகன் சிறைக்கு செல்கிறார். எனது மகன் எங்களோடு பொங்கல் கொண்டாடுவார் என எதிர்பார்த்தோம். இந்த பொங்கலுக்கு எங்களுடன் இருப்பார் என ஆசைபட்டோம். வருகிற 21, 22-ந் தேதிகளில் பேரறிவாளனை மருத்துவமனையில் சேர்க்கும் நிலையில் உள்ளது.

5 நாட்களாக நாங்கள் காவேரி மருத்துவமனையில் இருந்தோம். நாங்கள் மறுபடியும் பரோல் நீட்டிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். 3 நாட்களுக்கு முன் வரை எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்காததால் மருத்துவமனையில் இருந்து மகனோடு ஒரு நாளாவது வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டிற்கு வந்துவிட்டோம். எனது மகனுக்கு சிறுநீர் தொற்று நோய் இருப்பதால் சரிவர கவனிக்காமல் விட்டதால் புண்ணாகி வருவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். இதற்கு தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும். இதற்காகவாவது பரோலை நீட்டித்து கொடுத்திருந்தால் வசதியாக இருந்திருக்கும்.

எனது மகன் விடுதலை ஆவதற்கு தமிழக அரசு எனக்கு உதவி செய்யும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. ஏனென்றால் மறைந்த முதல் - அமைச்சர் ஜெயலலிதா என் கையை பிடித்துக்கொண்டு உனது மகனை உன்னிடம் சேர்க்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். அந்த நம்பிக்கையில் தான் இத்தனை காலம் வாழ்க்கையை ஓட்டி வருகிறேன். அந்த நம்பிக்கை இன்னும்தொடர்ந்து உள்ளது.

இந்த அரசு எனது மகன் விடுதலைக்கு விரைந்து முடிவெடுக்கும் என கோரிக்கை வைக்கிறேன். எனது மகனுடன் கொஞ்ச நாளாவது வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வேறு எதுவும் கேட்கவில்லை.

எனது மகன் அநியாயமாக இந்த தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். மகுனுடைய விடுதலையை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

Next Story